வேளாண் சட்டங்களை திரும்பப் பெற கோரும் மனுவை ஜனாதிபதியிடம் கொடுக்க சென்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது!!

டெல்லி : டெல்லியில் ஜனாதிபதியை சந்திக்க புறப்பட்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின்  எல்லையில் விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் நடத்தப்பட்ட 5 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்த நிலையில், அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

விவசாயிகளின் போராட்டத்துக்கு பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. காங்கிரஸ் கட்சியின்  அமைப்பின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், ‘நாடு முழுவதும் உள்ள விவசாயிகளிடம் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்தப்படும்’  என்று அறிவித்தார். அதன்படி நாடு முழுவதும் 2 கோடி பேரிடம் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கையெழுத்து படிவங்கள் பெறப்பட்டுள்ளன.

கையெழுத்து படிவங்கள் மற்றும் விவசாய சட்டங்களை  திரும்பப் பெறக் கோரும் கடிதத்தையும் நேரடியாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் கொடுக்க ராகுல் காந்தி உள்ளிட்டோர் திட்டமிட்டனர். அதாவது, வேளாண் சட்டங்களை திரும்பப்பெற மத்திய அரசு சம்மதிக்காத நிலையில் குடியரசுத் தலைவர் இதில் தலையிட்டு பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை அவரிடம் முன்வைக்க திட்டமிட்டனர்.

அதன் படி, இன்று டெல்லியில் குடியரசுத் தலைவரை சந்திக்க பேரணியாகச் சென்ற ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். ஏராளமான காங்கிரசார் அங்கு திரண்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் போலீசார் பலரை கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர். கொரோனா பாதிப்பின் காரணமாக டெல்லியில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதை மீறி காங்கிரசார் பேரணி நடத்தியதால் கைது செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: