பச்சையப்பன் அறக்கட்டளையை சொத்தாட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும்: ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு

சென்னை: புதிய தனி நீதிபதி வழக்கை விசாரித்து முடிக்கும்வரை பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகத்தை உயர் நீதிமன்ற சொத்தாட்சியர் வசம் ஒப்படைக்கவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. சென்னை பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி, கந்தசாமி நாயுடு ஆண்கள் கல்லூரி, செல்லம்மாள் மகளிர் கல்லூரி உள்ளிட்ட 6 கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் பச்சையப்பன் அறக்கட்டளையில் முறைகேடுகள் நடப்பதாக எல்.செங்குட்டுவன் உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மேலும், அறக்கட்டளையின் அறங்காவலர் தேர்தல் நடத்த தடை கேட்டும் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி ஆர்.சுரேஷ் குமார், பச்சையப்பன் அறக்கட்டளையின் மாற்றம் செய்யப்பட்ட விதி அடிப்படையில் அறக்கட்டளை உறுப்பினர்கள் தேர்தலை நடத்த வேண்டும். அதற்காக தற்போதைய அறக்கட்டளை நிர்வாகியாக இருந்த ஓய்வு பெற்ற நீதிபதி பி.சண்முகம் அறக்கட்டளை தலைவராக நியமிக்கப்படுகிறார்.பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான அண்ணா அரங்கம், அம்மா அரங்கம் ஆகியவை முகூர்த்தம் ஈவன்ட் மேனேஜ்மென்ட் என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட குத்தகை ரத்து செய்யப்படுகிறது. குத்தகை எடுத்த நிறுவனம் அரங்கங்களை 10 நாட்களுக்குள் அறக்கட்டளையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

தனிநீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து, பச்சையப்பன் அறக்கட்டளையின் முன்னாள் அறங்காவலர்கள் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அறக்கட்டளை நிர்வாகிகள் தேர்தல், கல்வி நிறுவனங்களின் தேர்வுகள், அரங்க ஒப்பந்தம், தவறான நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை தீர விசாரிக்க வேண்டியுள்ளது.

இதை தனி நீதிபதி கவனிக்க தவறிவிட்டார். எனவே, இந்த பிரச்னைகள் தொடர்பாக தனி நீதிபதி முழுமையாக மீண்டும் விசாரிக்க வேண்டும். தனி நீதிபதி யார் என்பதை புதிய தலைமை நீதிபதி முடிவு செய்வார். அறக்கட்டளை நிர்வாகத்தை நிர்வகித்து வந்த ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் விலகுவதாக தெரிவித்துள்ளதால், தனி நீதிபதி வழக்கை விசாரித்து முடிக்கும்வரை அறக்கட்டளை நிர்வாகத்தை உயர் நீதிமன்ற சொத்தாட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும். மேல் முறையீடு ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்று தீர்ப்பளித்தனர்.

Related Stories: