நாகர்கோவில் ஜங்சன் ரயில் நிலையத்தில் குவிந்து கிடக்கும் இருக்கைகள்

நாகர்கோவில்: நாகர்கோவில் முதல் திருவனந்தபுரம் வரை இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி கடந்த சில வருடமாக நடந்து வருகிறது. இடையில் பணியில் தொய்வு ஏற்பட்ட நிலையில் தற்போது வேகமாக நடந்து வருகிறது. இதே போல் நாகர்கோவில் டவுண், ஜங்சன் ரயில் நிலையங்களை விரிவாக்கம் செய்யும் பணியும் நடந்து வருகிறது. நாகர்கோவில் ஜங்சன் ரயில் நிலையத்தில் கிழக்கு பகுதியில் புதிதாக பிளாட்பாரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. ஜங்சன் ரயில் நிலையத்தில் எக்ஸ்லேட்டர், லிப்ட் ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளது.இது தவிர ரயில் தண்டவாளங்கள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் கோட்டார் ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக இருக்கைகள் அமைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. இதற்கான இருக்கைகள் கோட்டார் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளது. இந்த இருக்கைகள் அனைத்தும், திருவனந்தபுரம் ரயில்கள் நிற்கும் பகுதியில் போடப்பட்டுள்ளது. இந்த இருக்கைகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பே வந்துவிட்டதாகவும், அதனை இதுவரை பிளாட்பாரங்களில் போடவில்லை என பயணிகள் தெரிவித்தனர். இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது: நாகர்கோவில் ஜங்சன் ரயில் நிலையம் விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது.

தற்போது இருக்கும் பிளாட்பாரங்களை தவிர புதிதாக பிளாட்பாரங்கள் அமைக்கப்படவுள்ளது. மேலும் பயணிகளின் வசதிக்காக லிப்ட் அமைக்கப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்படும் பிளாட்பாரங்களில் போடுவதற்கு என இருக்கைகள் வந்துள்ளன. மற்ற பிளாட்பாரங்களிலும் பயணிகளின் பயன்பாட்டிற்கு புதிய இருக்கைகள் போடப்படும் என்றார்.

Related Stories: