பஞ்சாயத்து தலைவர் முதல் முதல்வர் வரை ஒவ்வொரு ஆண்டும் சொத்து பட்டியலை வெளியிட வேண்டும்: ஊழலை ஒழிக்க ஒடிசா முதல்வர் அதிரடி

புவனேஸ்வர்: ஒடிசா மாநில முதல்வரும், பிஜூ ஜனதா தளம் தலைவருமான நவீன் பட்நாயக், புதிதாக அமைக்கப்பட்ட பிஜு ஜனதா தள மாநில கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், ‘கிராம பஞ்சாயத்து தலைவரில்  தொடங்கி, தொகுதித் தலைவர், ஜில்லா பரிஷத் தலைவர், துணைத் தலைவர், எம்எல்ஏக்கள், அமைச்சர் மற்றும் முதல்வர் ஆகியோர் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் சொத்து விபரங்களை அளிக்க வேண்டும். அவை பொது மக்களின் தகவலுக்காக  பொதுவெளியில் வெளியிடப்படும். நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பொறுத்தவரை, எங்கள் கட்சி எம்பிக்கள் அனைவரும் தானாக முன்வந்து நாட்டிற்கே முன்மாதிரியாக பட்டியலை வெளியிடுவார்கள்.

இதேபோல், கீழ்நிலை ஊழியர்கள் முதல் தலைமைச் செயலாளர் வரையிலான அனைத்து அரசு ஊழியர்களும், ஒவ்வொரு ஆண்டும் தங்கள் சொத்துக்களை வெளியிட வேண்டும். அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின்  சொத்து விபரங்கள் அனைத்தும் மாநிலத்தில் செயல்படும் லோக் ஆயுக்தாவிடம் சமர்ப்பிக்கப்படும். ஊழலைத் தடுப்பதற்காக இதுபோன்ற கடுமையான நடவடிக்கை எடுத்த முதல் மாநிலம் என்ற பெருமையை ஒடிசா பெறும். இது மற்ற  மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும்.

எவ்வளவு சக்திவாய்ந்த நபராக இருந்தாலும் அரசுப் பதவிக்கு வரும்பட்சத்தில் அவர் தனது சொத்து விபரங்களை கட்டாயம் தெரிவிக்க வேண்டும். ஊழல் குற்றச்சாட்டில் தொடர்புடைய பலருக்கு எங்களது கட்சியில் பதவிகள்  வழங்கப்படவில்லை. கடந்த ஒரு வருடத்தில், 91 அரசு ஊழியர்கள் லஞ்சம், ஊழல் புகாரில் சிக்கியதால் அவர்கள் வேலைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இந்த நடவடிக்கையை  மேலும் தீவிரப்படுத்துவோம்’ என்றார்.

Related Stories: