தமிழகத்தில் முறைகேடுகளை தவிர்க்க டாஸ்மாக் கடைகளில் ஸ்வைப்பிங் மெஷின் கொண்டு வருவது எப்போது?.. விற்பனையாளர்கள் எதிர்பார்ப்பு

வேலூர்: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் ஸ்வைப்பிங் மெஷின் செயல்பாட்டுக்கு எப்போது கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மாநிலம் முழுவதும் இயங்கி வருகிறது. இவற்றில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள ஒரு கடைக்கு ஒரு மேற்பார்வையாளர், கடை விற்பனையாளர், உதவி விற்பனையாளர் என 4 ேபரும், நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் ஒரு மேற்பார்வையாளரும், கடை விற்பனையாளர், உதவி விற்பனையாளர் என 3 ேபரும், ஊராட்சி பகுதியில் ஒரு மேற்பார்வையாளர், கடை விற்பனையாளர், உதவி விற்பனையாளர் என 3 பேரும் பணியில் உள்ளனர்.

மாநிலம் முழுவதும் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக விற்பனை செய்வது, ஊழியர்களை தாக்கி பணத்தை கொள்ளையடிப்பது போன்ற சம்பவம் தொடர் கதையாக உள்ளது. முறைகேடுகளில் ஈடுபடும் கடையின் மேற்பார்வையாளர், விற்பனையாளர், உதவி விற்பனையாளர், நிர்ணயிக்கப்பட்ட விலையை விட (எம்ஆர்பி) கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் அவர்களுக்கு ரூ1க்கு ரூ1000 முதல் ஜிஎஸ்டியுடன் அதிகபட்சமாக ரூ10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் முறைகேடுகள் முழுமையாக கட்டுப்படுத்த முடியாமல் தொடர்ந்து டாஸ்மாக் நிர்வாகம் திணறி வருகிறது. இதை தடுக்க டாஸ்மாக் கடைகளுக்கு ஸ்பைப்பிங் மெஷின் வழங்க தமிழக அரசு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடவடிக்கை மேற்கொண்டது.

ஆனால் இது வெறும் வார்த்தைகளில் மட்டுமே உள்ளது. இதனால் கடந்த ஓரிரு மாதமாக டாஸ்மாக் கடைகள் மற்றும் டாஸ்மாக் மேலாளர்களின் அலுவலகத்தில் விஜிலென்ஸ் போலீசார் ரெய்டு நடத்தி கணக்கில் வராத லட்சக்கணக்கான ரூபாயை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர். வேலூரில் 3 கடைகளில் நடந்த ரெய்டில் ரூ1.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 11 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இதுகுறித்து டாஸ்மாக் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: டாஸ்மாக் கடைகளில் முறைகேடுகளை தடுக்க ஸ்வைப்பிங் மெஷின் கொண்டுவரப்படும் என்றும், முதற்கட்டமாக நகரங்களில் உள்ள கடைகளுக்கு தரப்படும் என்று அரசு அறிவித்தது. இதற்காக டெண்டர் கோரப்பட்டது. ஒப்பந்தமும் போடப்பட்டது. ஆனால் இந்த திட்டம் நிலுவையில் உள்ளது. இதனால் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு உள்ளது.

மேலும் மது விற்பனையில் மோசடி நடப்பதாக கூறி அதிகாரிகள் ஆய்வு என்ற பெயரில் தொந்தரவு செய்கின்றனர். மேலும் அவர்களுக்கு மாமூல் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த மாமமூல் கொடுக்க டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் பாட்டில்களுக்கு கூடுதலாக பணத்தை வசூலிக்கின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்றால் ஸ்பைப்பிங் மெஷின் கொண்டு வர வேண்டும். இந்த மெஷின் வந்தால் கூடுதலாக பணத்தை வசூலிக்க முடியாது. அவ்வாறு கூடுதலாக வசூலித்தாலும் அந்த பணம் நேரடியாக வங்கி கணக்கு சென்றுவிடும். எனவே இந்த திட்டத்தை தமிழக அரசு விரைவில் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் முறைகேடுகளை தடுக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: