பிரசாத் ஸ்டூடியோவுக்குள் வக்கீல்களுடன் இளையராஜா செல்ல அனுமதிக்க முடியுமா? ஸ்டூடியோ தரப்பு விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: பிரசாத் ஸ்டூடியோவுக்குள், இருதரப்பு வக்கீல்களுடன் இளையராஜா செல்ல அனுமதிப்பது குறித்து அந்த நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, 40 ஆண்டுகளாக இசையமைக்க பயன்படுத்திய சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேற வேண்டும் என்று அதன் நிர்வாகம் தெரிவித்தது. இது தொடர்பாக 17வது உதவி சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள தன்னுடைய இசை கருவிகள், விருதுகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துக்கொள்ள தன்னை அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது, இளையராஜாவை பிரசாத் ஸ்டூடியோவிற்குள் சில மணிநேரம் அனுமதிப்பதில் என்ன சிக்கல் உள்ளது. இது தொடர்பாக பதிலளிக்குமாறு பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர்களுக்கு  உத்தரவிட்டிருந்தார்.

வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பொருட்களை எடுத்துக்கொள்ள இளையராஜாவை அனுமதித்தால் ரசிகர்கள் அதிகளவில் கூடி விடுவார்கள் என்பதால் அவரை அனுமதிக்க முடியாது என்றனர். இதை கேட்ட நீதிபதி, மனுதாரர், நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் வழக்கறிஞர் ஆணையர் மற்றும் இரு தரப்பு வக்கீல்கள் மட்டும் ஸ்டூடியோவுக்குள் சென்று பொருட்களை எடுத்துக்கொள்ள அனுமதிப்பது தொடர்பாக  விளக்கமளிக்குமாறு பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார். வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

Related Stories: