அம்மூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஆபத்தான நிலையில் உள்ள பள்ளி கட்டிடம்: சீரமைக்க பெற்றோர், ஆசிரியர்கள் கோரிக்கை

ராணிப்பேட்டை: அம்மூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஆபத்தான நிலையில் உள்ள பள்ளி கட்டிடத்தை சீரமைக்க பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ராணிப்பேட்டை- சோளிங்கர் நெடுஞ்சாலையில் அம்மூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை 251 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் ஒரு தலைமையாசிரியர் உட்பட 8 ஆசிரியைகள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பள்ளியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு  கட்டிடங்கள் கட்டப்பட்டு மாணவர்களுக்கு பாடம் நடந்தப்பட்டு வருகிறது. அவ்வாறு உள்ள கட்டிடங் கள் பழுதடைந்து அதில் உள்ள ஓடுகள் விழுந்து மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலையில் உள்ளது.

மேலும், கடந்த மாதம் பெய்த மழையால் ஓடுகள் ஆங்காங்கே விழுந்து பள்ளி மேற்கூரைகள் முழுவதும் சேதமடைந்து மழைநீர் பள்ளியில் விழுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். எனவே மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறப்பதற்கு முன் மாவட்ட நிர்வாகம் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ள பள்ளி கட்டிடத்தை அகற்றி புதிய கட்டிடம் கட்டித்தர பெற்றோர்கள் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: