தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களை சந்திக்க போராட்ட குழு முடிவு: வேளாண் சட்டங்களை திரும்ப பெற பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்க திட்டம்

டெல்லி: வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி பாஜக கூட்டணி கட்சி தலைவர்களை சந்திக்க போவதாக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் அறிவித்துள்ளனர். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி கடந்த 25 நாட்களாக டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசுடன் நடந்த 5 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியடைந்த நிலையில் இன்று முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் வேளாண் சட்டத்தை திரும்ப பெறுமாறு பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்க சொல்லி தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களை அடுத்த வாரம் சந்திக்க உள்ளதாக தெரிவித்தனர். ஹரியானா சுங்கச்சாவடிகளை முற்றுகையிடும் போராட்டத்தையும் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அடுக்கடுக்கான போராட்ட அறிவிப்புகளுக்கு நடுவே விவசாயிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும், வசதியான தேதியை குறிப்பிடுமாறும் வேளாண் துறை செயலாளர் திரு விவேக் அகர்வால் விவசாய சங்கங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த 33 விவாசாயிகளுக்கு பல்வேறு பகுதிகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. மத்திய பாஜக அரசு காட்டும் அலட்சியம் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தும் என அதில் பங்கேற்றவர்கள் எச்சரித்தனர்.

Related Stories: