ஆசிய வங்கி கடனுதவியில் சுற்றுலாத்துறை செலவழித்த நிதி 90 கோடியா 77 கோடியா? தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பரபரப்பு தகவல்கள் அம்பலம்

சென்னை: ஆசிய வளர்ச்சி வங்கி கடனுதவியில் சுற்றுலாத்துறை செலவழித்த நிதி 90 கோடியா, 77 கோடியா? என்று முன்னுக்குபின் முரணாக பதில் அளித்து இருப்பது தகவல் அறியும் சட்டத்தின் மூலம் அம்பலமாகியுள்ளது.  

சுற்றுலா தலங்களில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில், கடந்தாண்டு மார்ச் மாதம் 201 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், 144 கோடி மட்டும் ஆசிய வளர்ச்சி வங்கி மூலம் கடனுதவி பெறப்பட்டுள்ளது.மீதமுள்ள 57 கோடி தமிழக அரசு பங்கின் மூலம் நடக்கிறது. இந்த நிதியை கொண்டு காஞ்சிபுரம், பெரும்புதூர், ஒகேனக்கல், திருச்சி, சிதம்பரம், ஆலங்குடி உள்ளிட்ட பல இடங்களில் 13 பேக்கேஜ் அடிப்படையில் சுற்றுலா உட்கட்டமைப்பு பணிகள் கடந்தாண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டன. ஆனால் கடந்த ஜனவரி மாதத்தில் 30 சதவீதம் மட்டுமே இப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் 30ம் தேதிக்குள் ஆசிய வளர்ச்சி வங்கி பணிகளை முடிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தது.

ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக செப்.27ம் தேதிக்குள் பணிகளை முடிக்க கால அவகாசம் வழங்கப்பட்டன.  ஆனால், பெரும்பாலான பணிகள் முடிக்கப்படவில்லை. மாறாக, பணிகள் முடிந்ததாக கூறி, சுற்றுலாத்துறை திட்ட கண்காணிப்பு பிரிவு பொது மேலாளர் அலுவலகம் சார்பில் கடந்த மாதம் வரை பழைய தேதியில் பில் தொகை செட்டில் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக அரசு உயர் அதிகாரிகளுக்கு தவறான தகவல் அளித்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு சுற்றுலாத்துறை அலுவலகம் சார்பில் மத்திய சுற்றுலாத்துறைக்கு கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி வரை 90 கோடி செலவழித்து இருப்பதாக கடந்த செப்டம்பர் 5ம் தேதி கடிதம் எழுதியுள்ளது.

ஆனால், இது தொடர்பாக தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விகளுக்கு கடந்த நவம்பர் 17ம் தேதி சுற்றுலாத்துறை பதில் ஒன்றை அளித்துள்ளது. அதில், தற்போது வரை 77.31 கோடி மட்டுமே செலவழித்து இருப்பதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம் சுற்றுலாத்துறை, ஆசிய வளர்ச்சி வங்கி கடனுதவியை முறையாக செலவிட்டுள்ளதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

* தமிழகத்தில் சுற்றுலா திட்டங்களை மேம்படுத்த 2019 மார்ச் மாதம் 201 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

* ஆகஸ்ட் 31 வரை இதில் 90 கோடி செலவழித்ததாக கூறப்பட்டது.

* நவம்பர் 17ல் அளித்த பதிலில் 77.31 கோடிதான் செலவானதாக கூறியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

Related Stories: