பந்தலூர் அருகே 3 பேரை கொன்ற ஆட்கொல்லி யானையை கண்டறிய 20 இடங்களில் கேமரா: 4வது நாளாக வனத்துறை திணறல்

பந்தலூர்:  பந்தலூர் பகுதியில் 3 பேரை கொன்ற ஆட்கொல்லி  யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடியாமல் திணறும் வனத்துறையினர் நேற்று கேமரா வைத்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். பந்தலூர் அருகே சேரம்பாடி கண்ணம்பள்ளியில் ஒருவர், கொளப்பள்ளி டேன்டீ பகுதியில் தி.மு.க கவுன்சிலர் மற்றும் அவரது மகன் என 3 பேரை சில நாட்களுக்கு முன் காட்டு யானை தாக்கி கொன்றது. இந்த அட்கொல்லி யானையை பிடிக்க வனத்துறையினர் முதுமலையில் இருந்து வசிம், பொம்மன், விஜய் மற்றும் டாப்சிலிப்பில் இருந்து கலிம் ஆகிய 4 கும்கி யானைகளை வரவழைத்தனர்.

கடந்த 4 நாட்களாக வனத்துறை சார்பில் யானையை ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்து வந்தனர்.3 நாட்களுக்கு முன் சேரம்பாடி சப்பந்தோடு வனப்பகுதியில் யானை கூட்டங்களுடன் ஆட்கொல்லி யானையின் நடமாட்டம் இருப்பதை கண்டறிந்தனர்.

கால்நடை மருத்துவர்கள் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தினர். ஆனால் அந்த யானை மீண்டும் யானை கூட்டத்துடன் சேர்ந்ததால் பிடிக்க முடியவில்லை. நேற்று முன்தினம் யானையை மீண்டும் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்தனர். ஆனால் யானை கூட்டத்தில்  ஆட்கொல்லி யானை இல்லாதது தெரியவந்தது.

அதனைத்தொடர்ந்து வனப்பகுதியில் கும்கி யானைகளை வைத்து வனத்துறையினர் இரவு வரை யானையை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போதும் யானை இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. நேற்று யானை நடமாடும் பகுதிகளான கோட்டமலை, சேரம்பாடி காப்பிக்காடு, நாயக்கன்சோலை, சிங்கோனா, கொளப்பள்ளி டேன்டீ பத்து லைன், எலியாஸ் கடை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் கேமரா பொருத்தப்பட்டன. யானைக்கு மயக்க ஊசி செலுத்தியதில் டோஸ் அதிகமாகி யானை வனப்பகுதியில் உள்ள முட்புதர்களில் சிக்கி எழுந்திருக்க முடியாமல் இருக்கலாமோ? என அச்சம் ஏற்பட்டுள்ளது. யானை கேரளா எல்லைப்பகுதிகளுக்கோ அல்லது வேறு ஏதாவது அடர்ந்த வனப்பகுதிக்கோ சென்றிருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.

வனத்துறையின் தகவலால் சர்ச்சை

பந்தலூர் பகுதியில் 3 பேரை கொன்ற ஆட்க்கொல்லி யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி நேற்று முன்தினம் முதல் தேடி வரும் நிலையில் தற்போது வரை கிடைக்கவில்லை. இந்நிலையில் பந்தலூர் சேரம்பாடி வனக்குழுவினர் கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் பகுதிக்கு நேற்று சென்று நிலம்பூர், முண்டேரி, வழிக்கடவு பகுதி வனத்துறையிடம் விசாரணை மேற்கொண்டனர்.  அந்த யானை கடந்த நவம்பர் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை நிலம்பூர் கும்பளப்பாறை ரப்பர் எஸ்டேட் பகுதியில் உள்ள ஆற்றங்கரை பகுதியில் இருந்ததாக கேரளா வனத்துறையினர் அந்த யானையின் படங்களை சேரம்பாடி வனத்துறையினரிடம் கொடுத்ததாக வனத்துறை சார்பில் தெரிவித்தனர்.

அதனால் அந்த யானை கேரளா பகுதிக்கு சென்றிருக்கலாம் என வனத்துறையினர் கருதுகின்றனர்.  வனத்துறையினரின் இந்த புதிய தகவலால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் கூறுகையில், ‘‘அந்த யானை இப்பகுதியில் நீண்ட காலமாக இருந்து வருகிறது. அடிக்கடி குடியிருப்பு பகுதிகளில் உலா வருகிறது. பொதுமக்கள் டார்ச் லைட் போன்றவை உபயோகப்படுத்தினால் வெளிச்சத்தை பார்த்தால் யானை சீறி வரும்’’ என கூறுகின்றனர்.

Related Stories: