அடிக்கல் நாட்டி 20 மாதங்களுக்கு மேலாகி விட்டது மதுரையில் எய்ம்ஸ் அமைவதில் தமிழக அரசுக்கு விருப்பமில்லையா? ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கேள்வி

மதுரை: அடிக்கல் நாட்டி 20 மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணி பாதி முடிந்திருக்க வேண்டும். மதுரையில் எய்ம்ஸ் அமைவதில் தமிழக அரசுக்கு விருப்பம் இல்லையா என ஐகோர்ட் கிளை நீதிபதிகள்  கேள்வி எழுப்பினர்.

மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் இதுவரை துவங்கவில்லை. அடிக்கல் நாட்டு விழா முடிந்து  ஓராண்டுக்கு மேலாகி விட்டது. எனவே, எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிதியை விரைவாக ஒதுக்கி பணியை துரிதமாக முடிக்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள், ‘‘எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிலத்தை தமிழக அரசு இன்னும் ஒப்படைக்கவில்லை என ஆர்டிஐ தகவல் கிடைத்துள்ளதாக  தகவல்கள் வந்தன. எப்போது அடிக்கல் நாட்டப்பட்டது’’ என்றனர். மனுதாரர், ‘‘27.1.2019ல் அடிக்கல் நாட்டப்பட்டது. 45 மாதத்தில் பணிகள் முடியும் என கூறப்பட்டது’’ என்றார்.

அப்போது நீதிபதிகள், ‘‘அடிக்கல் நாட்டப்பட்டு 20 மாதங்களுக்கு மேலாகிவிட்டது. இந்நேரம் கட்டுமானப் பணிகள் பாதி நடந்திருக்க வேண்டும். மதுரையில் எய்ம்ஸ் அமைவதில் தமிழக அரசிற்கு விருப்பமில்லையா’’ என்றனர். கூடுதல் அட்வகேட்  ஜெனரல் ெசல்லப்பாண்டியன் ஆஜராகி, ‘‘தமிழக அரசு தரப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்து, கையகப்படுத்தும் பணியை முடித்து 222.25 ஏக்கர் நிலத்தை மத்திய அரசிடம் ஒப்படைத்துள்ளோம். இந்தப்  பணி முடிந்த பிறகே, சுற்றுச்சுவர் கட்டும் பணி முடிந்தது. எய்ம்ஸ் அமைப்பதில் தமிழக அரசின் பணி முடிந்துவிட்டது. கட்டுமானப் பணியை மத்திய அரசு தான் ேமற்கொள்ள முடியும்’’ எனக் கூறி, அது தொடர்பான ஆவணங்களை தாக்கல்  செய்தார்.  அதில், ‘‘9.10.2018ல் சம்பந்தப்பட்ட நிலம் தோராயமாக ஒப்படைக்கப்பட்டது. 9.9.2019ல் 200 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. 10.10.2019ல் கூடுதலாக 22.49 ஏக்கர் நிலம் தேவை என மத்திய அரசு கேட்டது.  

27.8.2020ல் சம்பந்தப்பட்ட நிலத்தை முழுமையாக ஒப்படைக்க வேண்டுமென மத்திய அரசு கேட்டது.  கடந்த அக். 27ல் நிலம் ஒப்படைப்பிற்கான சான்றிதழை மத்திய அரசு கேட்டது. நவ. 3ல் கையெழுத்திற்காக சான்றிதழ் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது’’ என கூறப்பட்டிருந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘நிலம் ஒப்படைத்துள்ள நிலையில், ஆர்டிஐயில் ஏன் ஒப்படைக்கவில்லை என தகவல் அளித்தனர். இதுபோல் தவறான தகவலை தந்த அதிகாரி யார்?  அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா’’ என்றனர். உதவி சொலிசிட்டர்  ஜெனரல் விக்டோரியா கவுரி ஆஜராகி, ‘‘தமிழக அரசு தரப்பில் எய்ம்ஸ் அமைப்பதற்கான நிலம் முழுமையாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் கட்டுமானப் பணிக்கான நிதிக்காக ஜப்பான் நாட்டின் ஜிகா நிறுவனத்துடன் ஒப்பந்தம்  செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்தம் மார்ச் 31க்குள் இறுதி செய்யப்படும். அதிலிருந்து 45 மாதத்தில் கட்டுமானப் பணி முடியும்’’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘மதுரை எய்ம்ஸ் அடிக்கல் நாட்டிய போது, நாடு முழுவதும் எத்தனை இடங்களில் அடிக்கல் நாட்டப்பட்டது? அங்கு பணிகள் துவங்கியபோது இங்கு மட்டும் ஏன் துவங்கவில்லை. ஆர்டிஐயில் தவறான தகவல்களை  கொடுத்த அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஜப்பான் நிறுவனம் பல பணிகளை மேற்கொண்டுள்ளபோது, இங்கு மட்டும் ஏன் தாமதம்’’ என்றனர். பின்னர் இந்த மனுவின் மீது விரிவான உத்தரவு பிறப்பிப்பதாகக் கூறி தேதி  குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

Related Stories: