40 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில், தமிழகத்தில் ட்ரோன் நிறுவனம் உருவாக்கப்படலாம்: டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை தகவல்

சென்னை : “தமிழ்நாடு ட்ரோன் நிறுவனம் துவங்குவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன என்றும் இதன் மூலம் சுமார் 40 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதுடன், நீர்ப்பாசன மேலாண்மையும் மேம்படுத்தப்படும் என்றும் மிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் துணைத் தலைவராகவும், தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவராகவும் உள்ள டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம், ‘தற்சார்பு இந்தியாவுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என்ற தலைப்பில் இன்று ஏற்பாடு செய்திருந்த வலைதளக் கருத்தரங்கில் முக்கிய விருந்தினராகக் கலந்து கொண்டு  மயில்சாமி அண்ணாதுரை உரையாற்றினார். வரும் 22-25ம் தேதி வரை நடைபெற உள்ள இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2020-ஐ முன்னிட்டு இந்தக் கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அப்போது பேசிய அவர், மக்கள் தொகை எண்ணிக்கையும், உலக உணவு தானியங்களின் உற்பத்தியும் அதிகரித்து வரும் நிலையில், நில அளவு குறைதல், தண்ணீர் தட்டுப்பாடு, பணியாளர் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகள் எழுகிறது. இவற்றை சரி செய்வதற்கும், வயல்களில் பூச்சிக்கொல்லி மருந்தை தெளிப்பதற்கும், இதர வேளாண் பணிகளுக்கும் ட்ரோன் போன்ற நவீன தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எனினும், இந்தத் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரிக்கப்பட வேண்டும். வாழைத் தண்டிலிருந்து நாரெடுத்து அதிலிருந்து உபயோகப்படுத்துவதற்கு ஏற்றவகையில் பல பொருட்களை தயாரிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இந்தியாவில் வாழை மரங்கள் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் தமிழ்நாட்டிற்கு இந்தத் துறையில் அபரிமிதமான வாய்ப்பு இருக்கிறது, இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பொதுவாக வாழை நாருக்கு போதிய முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை. இதனை முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் பெரும் வளர்ச்சியை எட்ட முடியும்.புதிய கண்டுபிடிப்புகள் சமூகத்தையொட்டி செயல்பட வேண்டும். பல்வேறு பெரும் பிரச்சினைகளுக்கு செயற்கைக்கோள்கள் வாயிலாக தீர்வுகள் காண முடியும், என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Related Stories: