ஆங்கிலத்தில் படித்தால் உலகம் முழுவதும் வேலை தொழில் படிப்புகளில் மாநில ெமாழியை தவிர்க்கலாம்: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து

மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த சக்திராவ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘சட்டப்படிப்பை தமிழ் வழியில் முடித்தேன். குரூப் 1 பணியில் 181 காலியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி கடந்தாண்டு நடத்திய முதல் நிலை தேர்வில் தேர்ச்சி ெபற்றேன். பிரதான எழுத்துத் தேர்வை முடித்து, நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டேன். தேர்வானோர் பட்டியலில் என் பெயர் இல்லை. தமிழ் வழி கல்வியில் படித்தோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் முறை பின்பற்றப்பட்டும், எனக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனவே, கல்லூரிக்கு சென்று முழுநேரமாக தமிழ் வழியில் பயின்றவர்களை தேர்வு செய்து புதிய பட்டியல் வெளியிட்டு, அதன்பிறகே குரூப் 1 பணி நியமனங்களை மேற்கொள்ளுமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் நேற்று மீண்டும் விசாரித்தனர். மனுதாரர் ஆஜராகி, ‘‘தேர்வான 181 பேரில், 20 சதவீத தமிழ் வழி ஒதுக்கீட்டின்படி 34 பேர் தேர்வாகினர்.

இதில் 7 பேர் மட்டுமே கல்லூரிக்கு சென்று முழுமையாக தமிழ் வழியில் படித்தவர்கள். மற்றவர்கள் இடஒதுக்கீட்டிற்காக தொலைதூர கல்வியில் படித்துள்ளனர்’’ என்றார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் சார்பில் மூத்த வக்கீல் ஐசக் மோகன்லால் ஆஜராகி, ‘‘500 பேர் போலியாக சான்று பெற்றது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்’’ என்றார். அப்போது, ‘‘மாநில மொழிகளில் தொழில் படிப்புகளை படிப்பதன் மூலம், அந்தந்த மாநிலங்களில் மட்டுமே பணியாற்ற முடியும். ஆங்கிலத்தில் படிப்பதன் மூலம் உலகம் முழுவதும் சென்று பணியாற்றலாம் என்பதால் தொழில் படிப்புகளில் மாநில மொழிகளை தவிர்க்கலாம்’’ எனக் கூறிய நீதிபதிகள்,  போலி சான்றிதழ் பெற்றது குறித்த விசாரணை தொடர்பான அறிக்கையை, லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

Related Stories: