தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல்: அதிமுக பிரசாரத்திற்கு நடிகர், நடிகைகளை இழுக்க முயற்சி: முன்னணி தலைவர்கள் தீவிரம்

சென்னை: தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அதிமுக பிரசாரத்துக்கு நடிகர், நடிகைகளுக்கு முன்னணி தலைவர் வலை விரித்துள்ளனர். தமிழகத்தில் 2021ம் ஆண்டு ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதம்  தொடக்கத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் மட்டுமே உள்ளது. தேர்தலை சந்திக்க திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தயாராகி வருகிறது. தேர்தல் பணிகள் குறித்தும், பூத் கமிட்டி அமைப்பது  குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நேற்று முன்தினம் சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கூடி ஆலோசனை நடைபெற்றது.

இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. குறிப்பாக, சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் நடிகர், நடிகைகள் களம் இறக்கிவிடவும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வழக்கமாக எம்ஜிஆர்,  ஜெயலலிதா தலைமையில் அதிமுக செயல்பட்டபோது தேர்தல் பிரசாரத்திற்கு அதிகளவில் நடிகர், நடிகைகள் களம் இறக்கப்படுவார்கள். காரணம் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருவரும் சினிமாவில் இருந்ததால், அவருக்கு ஆதரவாக  அதிகளவில் நடிகர், நடிகைகள் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அதிமுக கட்சி மீது பெரிய அளவில் கொள்கை பிடிப்பு இல்லாவிட்டாலும், கட்சி தலைவர்கள் சினிமாவில் இருந்ததால் அவர்கள் தேர்தல் பிரசாரம் செய்து வந்தனர். அதற்காக பெரிய அளவில் பணமும் பெற்றுக் கொள்வார்கள். அதேநேரம், திமுக  கட்சிக்கு ஆதரவாகவும் பல முக்கிய நடிகர், நடிகைகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். ஆனால், அவர்கள் திராவிட கொள்கையில் முழு ஈடுபாட்டுடன் இருந்ததால், திமுகவுக்கு ஆதரவு அளித்து தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டு  வந்தனர்.தற்போது எம்ஜிஆர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக கட்சியில் மக்கள் செல்வாக்கு உள்ள தலைவர்கள் யாரும் இல்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக அதிமுக  கட்சியை வழிநடத்தி வருகின்றனர்.

ஆனாலும், அரசின் திட்டங்கள் பெரிய அளவில் பொதுமக்களுக்கு சென்று சேர்க்க முடியவில்லை என்ற ஆதங்கம் அதிமுக கட்சி நிர்வாகிகளிடம் தற்போதும் உள்ளது. இதற்கு காரணம், அதிமுகவில் உள்ள 2ம், 3ம் கட்ட தலைவர்கள் நகராட்சி,  பேரூராட்சி, கிராமங்களில் பெரிய அளவில் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. இதுபற்றி அவர்களிடம் கேட்டால், தற்போது அதிமுக கட்சியில் அமைச்சர்களும், மாவட்ட செயலாளர்களும், எம்பி, எம்எல்ஏக்களும் நல்ல வருமானம் பார்க்கிறார்கள்.  பகுதி செயலாளர்கள், வட்ட செயலாளர் என 2ம், 3ம் கட்ட தலைவர்களின் எந்த கோரிக்கையையும் அமைச்சர்கள் கண்டு கொள்வதே இல்லை.

கட்சியினர் ஒரு வேலை விஷயமாக அல்லது பணிமாறுதல் சம்பந்தமாக அமைச்சர்களை சந்தித்தால்கூட பணம் கொடுத்தால்தான் காரியம் நடக்கிறது. அமைச்சர்கள், தங்கள் மாவட்டங்களில் கட்சியை வளர்க்க எந்த நிதி உதவியும் செல்வது  இல்லை. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் கீழ்மட்ட தலைவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் கட்சி வளர்ச்சி பணிக்காக பணம் வழங்கப்படும். அந்த நடைமுறை இப்போது இல்லை. இந்த நிலையில்  சட்டமன்ற தேர்தல் வருவதால், பிரசாரத்துக்கு கூட ஆள் இல்லாத நிலை அதிமுகவில் உள்ளது.

அதனால், அதிமுக சார்பில் பிரசாரத்துக்கு பல நடிகர், நடிகைகள் விலை கொடுத்து இழுக்க அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் முயன்று வருகிறார்கள். அதிமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்தால் பல லட்சம் ரூபாய்  தருவதாக பேரம் பேசப்படுகிறது. இதனால் சூட்டிங் இல்லாமல் வீட்டில் இருக்கும் நடிகர், நடிகைகள் பிரசாரத்துக்கு செல்லவும் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் பணம் சம்பாதிக்க முடியும் என்று அவர்கள் திட்டம் போட்டுள்ளனர்.  ஆனால், எந்த கொள்கையும் இல்லாமல் திடீரென அதிமுக கட்சிக்காக பிரசாரம் செய்தால், மக்களிடம் எடுபடுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Related Stories: