பல்லாயிரக்‍கணக்‍கான விவசாயிகள் வருவதால் டெல்லியில் பதற்றம் நீடிப்பு: மத்திய அரசுக்கு விவசாயிகள் சங்கம் 3 நிபந்தனைகள்

டெல்லி: மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லி எல்லையில் 20-வது நாளாக விவசாயிகள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் மத்திய அரசு மற்றும் விவசாயிகளிடையே 3 நிபந்தனைகளை விதித்து விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள், 20 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் மறியல், சாலை மறியல், சுங்கச்சாவடி முற்றுகை, பாரத் பந்த், உண்ணாவிரதம் என ஒவ்வொரு நாளும் விவசாயிகளின் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.

20 நாட்களாக நடைபெற்று வரும் இந்த போராட்டம் எந்தஒரு தொய்வும் இல்லாமல் நடைபெற்று வருகிறது. மத்திய அரசை பொறுத்தவரை இந்த வேளாண் சட்டங்களை திரும்ப பெற வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்த நிலையில் சட்டங்களை திரும்ப பெரும் வரை போராட்டங்களை கைவிடப்போவதில்லை என்று விவசாயிகளும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ள நிலையில், தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில் பல்லாயிரக்‍கணக்‍கான விவசாயிகள் வருவதால் டெல்லியில் பதற்றம் நீடித்து வருகிறது. இது குறித்து பேசிய அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழுவினர்:- நாங்களும் மத்திய அரசுடன் மீண்டும் பேசுவதற்கு தயாராக இருக்கிறோம். அதே நேரத்தில் மத்திய அரசு எங்களுடைய 3 நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும் என கூறினர்.

1. ஏற்கனவே நடந்த பேச்சு வார்த்தையில் நாங்கள் ஏற்றுக் கொள்ள மறுத்த அம்சங்கள் தொடர்பாக மீண்டும் பேச கூடாது.

2. அடுத்தக்கட்ட பேச்சு வார்த்தை என்ன பேச போகிறோம் என்பது பற்றிய முழு விவரங்கள் கொண்ட புதிய அஜெண்டாவை தயாரிக்க வேண்டும்.

3. புதிதாக கொண்டுவரப்பட்ட 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவது தொடர்பாக முக்கியமாக பேசியே ஆக வேண்டும். இவ்வாறு விவசாய சங்கத்தினர் கூறியுள்ளனர்.

Related Stories: