வெள்ளப்பெருக்கால் ஆரணியாற்று தரைப்பாலம் சேதம் 19 நாட்களாக போக்குவரத்து பாதிப்பு: பொதுமக்கள் கடும் அவதி

ஊத்துக்கோட்டை: நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக ஊத்துக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள ஆந்திர மாநிலம் பகுதிகளில் கனமழை பெய்ததால் ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் ஏரி நிரம்பியது. இதையொட்டி கடந்த மாதம் 26ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் ஆரணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் இடையே உள்ள ஊத்துக்கோட்டை ஆரணியாற்றின் தற்காலிகமாக தரைப்பாலம் சேதமடைந்து இரண்டு இடங்களில் துண்டாக உடைந்தது.  இதனால் ஊத்துக்கோட்டை, தாராட்சி, பாலவாக்கம் போன்ற பல கிராமங்களை சேர்ந்தவர்கள் ஊத்துக்கோட்டை வந்து இந்த தரைப்பாலத்தை கடந்து மாவட்ட தலைநகரான திருவள்ளுர் மற்றும் காஞ்சிபுரம், பெருமந்தூர், பூந்தமல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கடந்த 19 நாட்களாக பெரியபாளையம் வழியாக 40 கிலோ மீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு செல்கின்றனர். மேலும், ஊத்துக்கோட்டையை சுற்றியுள்ள அனந்தேரி, போந்தவாக்கம், சீத்தஞ்சேரி, பென்னலூர்பேட்டை உள்ளிட்ட 50 கிராம மக்கள் தங்களின் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் அவதிப்பட்டனர்.

இதனால் அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள், கூலி வேலைக்கு செல்பவர்கள் என பல தரப்பட்டவர்கள் புதிய பாலத்தின் ஒரு முனையில் இருந்து மற்றொரு பகுதிக்கு நடந்து வந்து ஆபத்தான முறையில் பாலம் கட்ட அமைக்கப்பட்ட இரும்பு சாரத்தின் வழியாக இறங்கி வேலைக்கு சென்றனர். இதுபற்றிய செய்தி கடந்த மாதம் 30ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் வெளியானது. இதையறிந்து ஊத்துக்கோட்டை காவல்துறையின் சார்பில் கிராம மக்கள் நடந்து செல்ல ஏதுவாக இரும்பால் ஆன சாய்தள படிகள் அமைத்து தரப்பட்டது. மேலும் இந்த சாய்தள படிகளில் முதியவர்கள், பெண்கள், சிறுவர்கள் ஏறிச்செல்ல அவதிப்படுகின்றனர். தற்போது ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைய தொடங்கியதால் சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைத்து 19 நாட்களாக ஸ்தம்பித்திருந்த ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: