ராணுவ வீரர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது ராக்கெட் குண்டு சிதறல்கள் பட்டு பெண் படுகாயம்

மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வீரமலை அடிவாரத்தில் இந்திய ராணுவத்தின் பல்வேறு ரெஜிமென்ட்டுகளை சேர்ந்த ராணுவ வீரர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சி மற்றும் ராக்கெட் லாஞ்சர்களை கையாளும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கான பயிற்சியின்போது வீரமலை வனப்பகுதியில் யாரும் நுழையக் கூடாது என்று வருவாய்த்துறையினர் மூலம் தண்டோரோ போட்டு அப்பகுதி கிராமங்களில் அறிவிப்பு வெளியிடுகின்றனர். இந்நிலையில், நேற்றுமுன்தினம் மாலை துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது வயலில் கட்டியிருந்த மாட்டை காணவில்லை என பூசாரிபட்டியை சேர்ந்த வெள்ளக்கண்ணு மனைவி நல்லம்மாள்(36) என்பவர் வனப்பகுதியில் தேடிச்சென்றுள்ளார். அப்போது ராணுவத்தினர் சுட்ட சிறிய ரக ராக்கெட் குண்டு ஒன்று பாறையில் பட்டு அதன் கத்தியை போன்ற சிதறல்கள் தெறித்து வந்து நல்லம்மாள் தொடையில் பட்டு கிழித்தது. உடனே நல்லம்மாள் தனக்கு குண்டு காயம்பட்டது குறித்து கணவர் மற்றும் உறவினர்களிடம் செல்போன் மூலம் தகவல் கூறினார்.  இதையடுத்து உறவினர்கள் வந்து படுகாயத்துடன் கிடந்த நல்லம்மாளை மீட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: