தேனியில் ஐடி பார்க் அமைக்கும் நிலத்தை ஓபிஎஸ் ஆய்வு

தேனி: தேனி நகர புது பஸ் நிலையத்தில் இருந்து பெரியகுளம் செல்லும் பைபாஸ் சாலையில் வனத்துறைக்கு சொந்தமான இடத்திற்கு பின்புறம் அரசுக்கு சொந்தமான சுமார் 10 ஏக்கர் நத்தம் புறம்போக்கு இடத்தில் ஐடி பார்க் அமைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. இதனையடுத்து இந்த இடத்தில் ஐடி பார்க் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என நேற்று தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் நேரில் வந்து ஆய்வு செய்தார். ஆய்வின்போது, தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், மாவட்ட வன அலுவலர் கவுதம், கம்பம் தொகுதி எம்எல்ஏ ஜக்கையன், முன்னாள் எம்பி சையதுகான், மாவட்ட ஊராட்சித் தலைவர் பிரீத்தா உள்பட பலர் உடன் இருந்தனர்.

இதன் பின் அரண்மனை புதூர் சென்ற துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், முல்லைப் பெரியாறு பாலத்தில் நடந்து வரும் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார். அப்போது விரைவில் பணிகளை முடிக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து அரண்மனை புதூர் ஊராட்சிக்குட்பட்ட கோட்டைப்பட்டி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடத்தை அவர் திறந்து வைத்தார். இதில் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, தேனி ஊராட்சி ஒன்றிய துணைசேர்மன் முருகன், அரண்மனை புதூர் ஊராட்சி தலைவர் பிச்சை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: