வெள்ளப்பெருக்கால் தாழையூத்து அருவிக்கு செல்ல வனத்துறை தடை

ஒட்டன்சத்திரம்: வெள்ளப்பெருக்கால் தாழையூத்து அருவிக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இதனால் ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது. இந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக அணையில் இருந்து வினாடிக்கு 200 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பரப்பலாறு அணையிலிருந்து வெளியேறும் நீரானது விருப்பாட்சியில் உள்ள தாழையூத்து அருவியின் மூலம் நங்காஞ்சி ஆற்றின் வழியாக சடையன்குளம், செங்குளம், பெரியகுளம், உள்ளிட்ட மற்ற குளங்களுக்கு சென்றடைகிறது. இதனால் விருப்பாச்சி தாழையூத்து அருவியில் அளவுக்கு அதிகமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் மற்றும் தீர்த்தம் எடுக்க வரும் பக்தர்கள் உள்ளிட்டோர் வருவதற்கு வனத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. வனத்துறையின் அனுமதியை மீறி உள்ளே செல்பவர்கள் மீது காவல்துறையின் சார்பில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: