சென்னையில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுவதை தடுக்க அடையாறு, கூவம் தடுப்புச்சுவர் மேலும் உயர்த்தப்படுகிறது: உபரி நீரை திருப்பி விடவும் புதிய திட்டம்; இம்மாத இறுதிக்குள் திட்ட அறிக்கை தயார் செய்ய உத்தரவு

சென்னை: சென்னை மாநகர், புறநகரில் குடியிருப்புகளுக்கு நீர் புகுவதை தடுக்க தடுப்பு சுவர் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை டிசம்பருக்குள் முடிக்க பொறியாளர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நிவர் புயல் காரணமாக கடந்த வாரம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை பெய்தது. இந்த மழை காரணமாக ஏரிகள் நிரம்பி உபரி வெளியேறியதால் கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய், கொசஸ்தலையாற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.

குறிப்பாக, செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விட்டதால் அடையாற்றில் கரை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம், ராயப்பா நகர், அமுதம் நகர் உள்ளிட்ட பல பகுதிகள் குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்தது. இந்த தண்ணீர் 1 வாரம் வரை தேங்கி கிடந்ததால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாளுக்கு முன்பு சென்னை மாநகர் மற்றும் புறநகரில் நீர் சூழ்ந்த பகுதிகளில் ஆய்வு செய்தார்.

அப்போது, குடியிருப்புகளுக்கு முன்பு தண்ணீர் தேங்குவதை தடுக்க நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படும் என்று உறுதி அளித்திருந்தார். அதன்பேரில், தற்போது பொதுப்பணித்துறை சார்பில் அடையாற்றில் ஒரே நேரத்தில் உபரி செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது கால்வாய் பகுதிகளில் ஒரே இடத்தில் தண்ணீர் செல்வதற்கு பதிலாக, அதை திருப்பி விடப்படுகிறது. மேலும், அடையாற்றில் கரையோரப் பகுதியில் தடுப்பு சுவரை மேலும் உயர்த்தி கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் கொசஸ்தலையாறு, பக்கிங்காம் கால்வாய், கூவம் ஆறுகளில் தடுப்பு சுவர் உயர்த்துவது மற்றும் ஏரிகளில் இருந்து உபரி நீர் செல்லும் கால்வாயை திருப்பி விடுவது தொடர்பாக திட்ட அறிக்கை தயார் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பணியை நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் சீரமைத்தல் கழகம் மற்றும் பொதுப்பணித்துறை பாலாறு வட்ட வடிநில கண்காணிப்பு பொறியாளர் முத்தையா தலைமையிலான பொறியாளர்கள் குழுவினர் இணைந்து மேற்கொள்கின்றனர். இதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணியை இம்மாத இறுதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து வரும் ஜனவரி மாதம் முதல் இப்பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

* தற்காலிக சீரமைப்பு பணிக்கு ரூ.20 கோடி கேட்டு கடிதம்

நிவர் புயல் காரணமாக பொதுப்பணித்துறை உட்கட்டமைப்பு சேதமடைந்துள்ளது. எனவே, தற்காலிக சீரமைப்பு பணி மேற்கொள்ள ரூ.20 கோடி தர வேண்டும் என்று பொதுப்பணித்துறை மாநில பேரிடர் மேலாண்மைக்கு கடிதம் எழுதியுள்ளது. அதே போன்று, 8 மாவட்டங்களில் நெடுஞ்சாலைத்துறை கட்டுபாட்டில் உள்ள  561.80 கி.மீ நீள சாலையும் சேதமடைந்துள்ளது. அதை தற்காலிகமாக சீரமைக்க ரூ.10 கோடி ஒதுக்க வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளது.

ரூ.400 கோடியில் மழைநீர் வடிகால் திட்டம்: பெருங்குடியில் 125 ஏக்கர் சதுப்பு நிலமாக மாற்றம்

சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: இந்தாண்டு சென்னையில் 60 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. 6 நாட்களில் 1.05 கோடி மக்களுக்கு தரமான உணவை மாநகராட்சி வழங்கி உள்ளது. நிவர் மற்றும் புரெவி புயல்களால் சென்னையில் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. மழை காலங்களில் சவலான செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், வேளச்சேரி, பெருங்குடி போன்ற 23 இடங்களை தேர்ந்தெடுத்து நிரந்தர தீர்வு காணப்படும். பள்ளிக்கரணை சதுப்பு நிலம், பெரும்பாக்கம், செம்மஞ்சேரியில் போன்ற 5 இடங்களில் 400 கோடி ரூபாய் செலவில் வடிகால்கள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தினால் 50 செமீ மழை பெய்தாலும் தண்ணீர் தேங்காது.

நகர வளர்ச்சியால் பள்ளிக்கரனை சதுப்பு நில பரப்பளவு குறைந்துள்ளது. இதனால் பெருங்குடி குப்பை கிடங்கின் மொத்த பரப்பளவான 225 ஏக்கரில், 125 ஏக்கர் மீண்டும் சதுப்பு நிலமாக மாற்றப்படும். சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் சதவிகிதம் 3 ஆக குறைந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை விட 35 மடங்கு அதிகமாக பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. சென்னையில் கொரோனா தடுப்பு மருந்து முதற்கட்டமாக 60 ஆயிரம் மருத்துவ பணியாளர்களுக்கும், இரண்டாம் கட்டமாக முன்கள பணியாளர்களுக்கும், மூன்றாம் கட்டமாக முதியவர்களுக்கும் வழங்கப்படும். தடுப்பு மருந்து தயாரிப்பு இறுதி கட்ட பணியில் உள்ளதால் அடுத்த மூன்று மாதத்திற்கு மாஸ்க் அணிவதை தவிர்க்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: