தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி 17 சோதனைச்சாவடிகளில் ரெய்டு: பல லட்சம் லஞ்சப்பணம் பறிமுதல்; போலீசை கண்டதும் ஊழியர்கள் தப்பி ஓட்டம்

சென்னை: ஊத்துக்கோட்டை, திருத்தணி, நசரத்பேட்டை உள்பட மாநிலம் முழுவதும் உள்ள 16 ஆர்டிஓ அதிகாரிகளின் சோதனை சாவடியிலும், ஒரு காவல்துறை சோதனைச் சாவடியிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று காலை அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.9 லட்சத்து 18 ஆயிரம் சிக்கியது. போலீசாரைப் பார்த்ததும் பணத்துடன் தப்பிவிட்ட ஊழியர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். தமிழகம் முழுவதும் மாவட்டம் விட்டு மாவட்டம் சரக்கு ஏற்றிச் செல்லும் வாகனங்கள், மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் வாகனங்களுக்கு அனுமதி வழங்கவும், சில தவறுகளை மூடி மறைப்பதற்காகவும் ஆர்டிஓ சோதனைச் சாவடிகளில் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் அதிகாலை 3 மணிக்கு ஒரே நேரத்தில் சோதனை நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது.

சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில், ஊத்துக்கோட்டை அண்ணாநகர் பகுதியில் சோதனைச்சாவடி உள்ளது. இங்கு ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கும் தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கும் செல்லும் வாகனங்கள் சோதனை செய்து அனுப்பப்படும். இந்த நிலையில், சோதனை சாவடியில் பர்மிட் வழங்குவதற்கு லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பாஸ்கர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் மலர்கொடி, கிறிஸ்டி, செல்வக்கண் டேவிட், செந்தில் குமார் மற்றும் வேணுகோபால் ஆகியோர் நேற்று அதிகாலை 3 மணிக்கு சோதனைச்சாவடியில் தீவிர சோதனை செய்தனர்.

அப்போது கணக்கில் வராத 72 ஆயிரத்து 750 ரூபாய் மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இதனிடையே லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரிகள் சோதனை நடத்தி கொண்டிருந்தபோது தற்காலிக பணியாளர்கள் 3 பேர், பணத்துடன் தப்பி சென்று விட்டதாக தெரிகிறது. அவர்களை தேடி வருகின்றனர். சென்னை, திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருத்தணி பொன்பாடி சோதனை சாவடியிலும் டிஎஸ்பி கலைச்செல்வம், இன்ஸ்பெக்டர்கள் கார்த்திக், சுமித்ரா, அண்ணாதுரை, தமிழரசு ஆகியோர் தலைமையில் 13 பேர் கொண்ட குழுவினர் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் சோதனை நடத்தினர். 43 ஆயிரத்து 410 ரூபாய் சிக்கியது. இதுபோல் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரிக்கின்றனர். இந்த சோதனை காரணமாக ஆந்திரா, தமிழகம் இடையே சுமார் 6 மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சோதனை சாவடி மையம் உள்ளது. இவ்வழியாக ஆந்திரா, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு வாகனங்கள் மற்றும் கன ரக வாகனங்கள் சென்று வருகிறது. இந்த அலுவலகத்தில் அதிகளவில் லஞ்சம் வாங்கப்படுவதாக வந்த தகவலையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி குமரகுருபரன் தலைமையில் 4 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 10 பேர் நேற்று அதிகாலை திடீரென சென்றனர். அதிகாரிகள் வருவதை அறிந்த ஊழியர்கள் அலுவலகத்தின் பின் பக்கத்தில் உள்ள காலி இடங்களில் பணத்தை வீசினார்கள். அதிகாரிகள் சோதனை நடத்தி அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் அலுவலகத்தில் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ஒரு லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் சிக்கியது. இங்குள்ள அதிகாரிகள், சிலருக்கு தனியாக சம்பளம் கொடுத்து வேலைக்கு வைத்து சாலையில் செல்லும் வாகனங்களை வலுக்கட்டாயமாக மடக்கி பணம் வசூல் செய்யும் பணியில் ஈடுபடுகின்றனர். இதனால் இப்பகுதியில் விபத்துகள் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்தது போல், இங்கு கணக்கில் இல்லாத ஊழியர்களையும் கணக்கிட வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை அருகே உள்ள வாளையார் கே.ஜி.சாவடியில் உள்ள சோதனைச்சாவடி நேற்று காலை 6 மணியளவில் கோவை லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கணேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் அதிரடியாக நுழைந்தனர். அப்போது அங்கு 5க்கும் மேற்பட்ட அலுவலர்கள் இருந்தனர். மோட்டார் வாகன ஆய்வாளர் சரோஜா, உதவியாளர் அருண்குமார் ஆகியோரிடம் இருந்து கணக்கில் காட்டப்படாத ரூ.87 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. பொள்ளாச்சி கோபாலபுரம் போக்குவரத்து சோதனைச்சாவடியில் நேற்று காலை 5 மணியளவில் லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி கணேசன் தலைமையில் சோதனை நடைபெற்றது.

அப்போது அங்கு பணியில் இருந்த மோட்டார் ஆய்வாளர் செந்தில்குமார், உதவியாளர் ஸ்ரீகாந்த் ஆகியோரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.52,000 பறிமுதல் செய்யப்பட்டது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே புளியரையில் சோதனை சாவடியில், லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி எஸ்கால் தலைமையில் 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். இதில் ரூ.41 ஆயிரத்து 290 பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சுற்றுவட்டாரப் பகுதியில் காவல்துறை, வட்டார போக்குவரத்து துறை, வனத்துறை ஆகிய துறைகளின் கீழ் 10க்கும் மேற்பட்ட சோதனைச்சாவடிகள் இயங்கி வருகிறது.

தமிழகத்தின் எல்லையோர பகுதியில் ஓசூர் இருப்பதால், இவ்வழியாக கர்நாடகா மற்றும் வடமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. முதல் சிப்காட் பகுதியில் உள்ளே, வெளியே என இரு சோதனைச்சாவடிகள் வட்டார போக்குவரத்து துறையின் கீழ் இயங்கி வருகிறது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்சஒழிப்பு டிஎஸ்பி கிருஷ்ணராஜ், இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் தலைமையில் 3 குழுக்கள் அமைக்கப்பட்டு நேற்று காலை 6 மணிக்கு ஓசூர்,கலைக்கோவில், பாகலூர் ஆகிய சோதனைச்சாவடியிலும் சோதனை நடத்தினர். அதில், ஓசூரில் தமிழகத்திலேயே அதிகப்பட்சமாக ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 100 பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூர் மாவட்டம் காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை மற்றும் சேர்க்காடு பகுதிகளில் போக்குவரத்து சோதனை சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி ஹேமசித்ரா தலைமையில் போலீசார் நேற்று அதிகாலை 4 மணியளவில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, காட்பாடியில் உள்ள வாகன சோதனையில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் ராம்கண்ணன் மற்றும் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.94 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், சேர்க்காடு வாகன சோதனையில் கணக்கில் வராத ரூ.38 ஆயிரத்து 875 ரொக்கப் பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதேபோல, கன்னியாகுமரி களியக்காவிளை சோதனை சாவடியில் 64 ஆயிரத்து 140 ரூபாயும், நீலகிரி மாவட்டம் கூடலூர் தொரப்பள்ளி சோதனைச் சாவடியில் 34 ஆயிரத்து 700, விழுப்புரம் உழுந்தையான்பட்டு-புதுவை சோதனைச் சாவடியில் ரூ.16 ஆயிரம், தேனியில் உள்ள பழனிசெட்டிபட்டி சோதனைச் சாவடியில் ரூ.5,500 ஆகிய 15 சோதனைச் சாவடிகளில் பணம் பறிமுதல் செய்யப்பட்டன. நீலகிரி மாவட்டம் தலைகுந்தா சோதனைச் சாவடியில் பணம் எதுவும் சிக்கவில்லை. 16 ஆர்டிஓ அதிகாரிகளின் சோதனைச் சாவடியில் நடத்தப்பட்ட சோதனையைப் போல, கன்னியாகுமரி களியக்காவிளை போலீஸ் சோதனைச் சாவடியிலும் சோதனை நடத்தப்பட்டு ரூ.20 ஆயிரத்து 740 பறிமுதல் செய்யப்பட்டன. தமிழகம் முழுவதும் நடந்த சோதனையில் ₹9 லட்சத்து 17 ஆயிரத்து 935 பறிமுதல் செய்யப்பட்டன. அதிகாலையில் சோதனை நடத்தியபோதே இவ்வளவு பணம் கைப்பற்றப்பட்டன. இன்னும் தாமதமாக நடத்தியிருந்தால் மேலும் அதிக அளவில் பணம் சிக்கியிருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனாலும், ஒரே நாளில் 17 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

* காய்கறிகளையும் விடவில்லை

ஆர்டிஓ அதிகாரிகளின் வாகனச் சோதனை சாவடியில் லஞ்சப் பணம் மட்டுமல்லாமல், காய்கறிகள், பழங்கள், முட்டை, இளநீர் ஆகியவற்றையும் லஞ்சமாக வாங்கியுள்ளனர். இதைப் பார்த்ததும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதை வைத்துப் பார்க்கும்போது சோதனைச் சாவடியில் பணியாற்றும் அதிகாரிகள் யாரும் கடைகளில் காய்கறிகளை வாங்குவது இல்லை. இப்படி மிரட்டி வாங்கியே எடுத்துச் சென்றது தெரியவந்துள்ளது.

Related Stories: