திருமங்கலம் பகுதியில் தொடர் மழை; 10 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பும் கிணறுகள்: விவசாயிகள் மகிழ்ச்சி

திருமங்கலம்: திருமங்கலம் பகுதியில் சமீபத்தில் பெய்த தொடர் மழையால் 10 ஆண்டுகளுக்கு பின்பு கிராம புறங்களில் கிணறுகள் முழுவதும் நிரம்பி காட்சியளிப்பது விவசாயிகள், பொதுமக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில்  ஏராளமான வயல்வெளிகளில் கிணறுகள் அமைந்துள்ளன. கிணற்று பாசனம் அதிகம் நடைபெறும் இந்த பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளாக கிணறுகள் வறண்டு காட்சியளித்தன. ஒரு சில கிணறுகளில் மட்டும் ஊற்று இருந்ததால் ஊறி தண்ணீர் தரையோடு தரையாக காணப்பட்டு வந்தது.

இதனால் விவசாயிகள் தங்களது நிலங்களில் லாரிகள் மூலமாக தண்ணீரினை விலைக்கு வாங்கி பாய்ச்சி பயிர்களை காப்பாற்றி வந்தனர். இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு பின்பு இந்தாண்டு கடந்த சில தினங்களாக திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. இதனால் ஏராளமான கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்துவங்கியது. மழை தொடர்ந்ததால் கிராம பகுதிகளில் உள்ள கிணறுகளுக்கும் தண்ணீர் பெருக்கெடுக்கத் துவங்கியது. குறிப்பாக உச்சப்பட்டி, தர்மத்துபட்டி, சொக்கநாதன்பட்டி, உரப்பனூர், புளியங்குளம், பெருமாபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கிணறுகள் நிரம்பியுள்ளன.

சில வயல்வெளிகளில் கிணற்றுகளில் தண்ணீர் நிரம்பி வயல்களுக்கு பாய்ந்தோடியது.  நீண்ட ஆண்டுகளுக்கு பின்பு திருமங்கலம் பகுதிகளில் உள்ள கிணறுகள் நிரம்பியுள்ளது விவசாயிகள் மற்றும் பொதுமக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

இது குறித்து உச்சப்பட்டியை சேர்ந்த கல்யாணசுந்தரம் கூறுகையில்,‘‘மழையால் கிணறுகள் நிரம்பியுள்ளது. வயல்களில் வற்றி போய் காணப்பட்ட கிணறுகளை ஒருசிலர் மூடிவிட்டனர். ஆனால் இந்தாண்டு எதிர்பாராதவிதமாக பெய்த தொடர்மழையால் கிராமபுறங்களில் கிணறுகள் நிரம்பியுள்ளன. இதனால் நிலத்தடிநீர்மட்டம் உயர்ந்து கிணற்று பாசனம் இந்தாண்டு அமோகமாக இருக்கும்,’’என்றார்.

Related Stories: