தலைமையை புகழ்பவர்களுக்கு மட்டும் அனைத்தும் கிடைக்கிறது: திரிணமுல் காங். கட்சியின் மூத்த தலைவர்கள் அதிருப்தி.!!!

கொல்கத்தா: திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மத்தியில் நாளுக்குநாள் அதிருப்தி தீவிரமடைந்து வருகிறது. மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர், தேர்தல் பணிகளுக்கான வியூகங்களை வகுத்து  வருகின்றனர். இந்த பணியில் ஈடுபடுபவர்களால் கட்சியினரிடையே அதிருப்தி ஏற்பட்டு வருகிறது. இதனால் மாநில போக்குவரத்து துறை அமைச்சரும் கட்சியின் மூத்த தலைவருமான சுவேந்த் ராஜினாமா செய்துள்ளார். இதன் மூலம்,  வெளியில் தெரியாமல் இருந்த இந்த பிரச்னை தற்போது வெளிச்சத்திற்கு வந்தது.

இவர், மேற்கு மித்னாபூர் பகுதியில் 50க்கும் மேற்பட்ட தொகுதிகளில் செல்வாக்கு மிக்கவர். மேலும் பல மூத்த தலைவர்கள், கட்சியில் ஓரங்கட்டப்படுதாக குற்றம் சாட்டி வருகின்றனர். இதுபற்றி மாநில வனத்துறை அமைச்சர் ராஜிப் பானர்ஜி  கூறுகையில், ‘மூத்த தலைவர்களின் கருத்துக்களை கட்சி மேலிடம் பொருட்படுத்துவதில்லை. தலைமையை புகழ்பவர்களுக்கு மட்டும் அனைத்தும் கிடைக்கிறது. புகழை விரும்பாத நான் உட்பட பலரும் ஓரங்கட்டப்படுறோம்’ என்றார்.  அதேபோல மூத்த தலைவர் ஆதின் கோஷ், ‘முக்கிய தலைவர்கள் பலரும் மிக சாதாரணமாக நடத்தப்படுகின்றனர்’’ என்றார்.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், திரிணமுல் காங்கிரசில் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் 10 பேர் குமுறலில் உள்ளனர். கட்சியில் எங்களது குரல் எடுபடவில்லை. தேர்தல் பணியில்  ஈடுபடுபவர்கள் கட்சியில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இதை அறிந்தும் முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்றனர். தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் மம்தாவிடம் இப்பிரச்னை குறித்து விளக்கம் அளிக்க முடியாமல்  பல தலைவர்கள் தவிக்கின்றனர்.

Related Stories: