சென்னை பெருநகர பகுதிக்கான 3-வது மாஸ்டர் பிளான் தயாரிக்கும் பணிகள் தொடக்கம்: 2026 - 2046 வரை மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி பணிகளுக்காக திட்டம்..!!

சென்னை: சென்னை பெருநகர பகுதிக்கான மூன்றாவது மாஸ்டர் பிளான் தயாரிக்கும் பணிகள் தொடங்கியிருக்கிறது. 2026 - 2046 வரை மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி பணிகளுக்காக இத்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரையில் சென்னை மாநகர பகுதி, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு உட்பட்ட பகுதி என இரு பிரிவாக உள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு உட்பட்ட பகுதிகள் சென்னை பெருநகர பகுதிகள் என்று அழைக்கப்படுகிறது. இந்த பகுதிக்கான மாஸ்டர் பணிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் செயல்படுத்தப்படுகிறது. ஏற்கனவே இரண்டு மாஸ்டர் பணிகள் சென்னையில் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இரண்டாவது மாஸ்டர் பிளானானது 2008 முதல் 2026ம் ஆண்டு வரை செயல்பாட்டில் இருக்கிறது. இரண்டாம் கட்ட மாஸ்டர் பிளானானது செயல்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக தெரிவித்துள்ள சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், சென்னையின் அடுத்தகட்ட வளர்ச்சிக்காக மூன்றாவது மாஸ்டர் பிளானை தயாரிக்கக்கூடிய பணிகளை தற்போது தொடங்கியிருக்கிறது.

2026 - 2046 வரை சென்னையின் வளர்ச்சி எப்படி இருக்கும். அந்த காலகட்டத்தில் சென்னை மக்களின் தேவை எவ்விதத்தில் இருக்கும் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை மக்களிடம் கேட்டறிந்து விரிவான வரைபடம் மற்றும் திட்ட அறிக்கையுடன்  மூன்றாவது மாஸ்டர் பிளானை அளிப்பதற்காக நிறுவனங்களுக்கு சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் அழைப்பு விடுத்துள்ளது. 2035ம் ஆண்டில் சென்னையில் வசிப்போர் எண்ணிக்கை 1 கோடியே 48 லட்சமாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. அவர்களின் தண்ணீர் தேவை, மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் அவர்களுக்கான போக்குவரத்து வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவான மூன்றாவது மாஸ்டர் பிளானை கட்டமைப்பதற்கான பணிகள் தொடங்கியிருக்கிறது. வருடத்திற்கு 1 லட்சம் பேர் சென்னைக்கு இடம்பெயர்வது ஆய்வில் தெரியவந்துள்ளது.

Related Stories: