படைகள் வாபஸ் சீனா முரண்பட்ட தகவல்: வெளியுறவு அமைச்சர் குற்றச்சாட்டு

புதுடெல்லி: எல்லையில் குவிக்கப்பட்டிருக்கும் படைகளை திரும்பப் பெறுவது தொடர்பாக சீனா முரண்பட்ட கருத்துகளைக் கூறுவதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. கிழக்கு லடாக் எல்லையில் கடந்த மே மாதம் முதல் இந்தியா-சீனா இடையே பதற்றம் நிலவி வருகிறது. இருநாடுகளும் தங்களது படைகளையும், ஆயுதங்களையும் குவித்து வருகின்றன. இந்த போர் பதற்றத்துக்கிடையே இருநாடுகளிடையே பேச்சுவார்த்தையும் உயர்மட்ட அதிகாரிகளிடையே நடந்து வந்தது. இந்த பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்பட்டு, எல்லையில் குவிக்கப்பட்டிருக்கும் படைகளை திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும், அமைதியான சூழல் எல்லையில் நிலவ ஒத்துழைப்பை பரஸ்பரம் வழங்க வேண்டும் என்றும் இருநாடுகளும் கூறியிருந்தன.

இந்த உடன்பாட்டு நடவடிக்கையை சீன பாதுகாப்பு அமைச்சகமும் தனது அதிகாரப்பூர்வமான இணையதளம் மூலம் முன்பு அறிவித்திருந்தது. ஆனால், சொன்னது போல தனது படைகளை வாபஸ் பெற்றுவிட்டதாக சீனா இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளார். காணொலி வாயிலாக நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் ஜெய்சங்கரிடம், லடாக் எல்லை பிரச்னை தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது அவர் அளித்த பதிலில், ‘‘எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற்றுவிட்டதாக சீனா இன்னும் உறுதிப்படுத்தவில்லை. மாறுபட்ட கருத்துக்களைத் தொடர்ந்து கூறி வருகிறது. இதுதொடர்பாக முரண்பட்ட ஐந்துவிதமான பதில்களை இந்தியாவிடம் கூறியுள்ளது. கடந்த 1988ம் ஆண்டு முதலே இருநாடுகளிடையே எல்லை பிரச்னை இருக்கிறது. ஆனாலும், நேர்மறையான அணுகுமுறை இதுவரை இருந்து வந்தது. ஆனால், கடந்த 30 வருடங்களில் இல்லாத அளவுக்கு இந்தியா-சீனா உறவு தற்போது மோசமான கட்டத்தை அடைந்துள்ளது. எல்லையில் ஆயிரக்கணக்கான வீரர்களை வைத்துக் கொண்டிருக்கும்போது எப்படி சுமூகமான சூழல் நிலவும்?’’ என்றார்.

Related Stories: