உலகின் மிக சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியல் வெளியீடு: 41-வது இடத்தில் மத்தியமைச்சர் நிர்மலா சீதாராமன்; கமலா ஹாரிஸ் 3-ம் இடம்.!!!

புதுடெல்லி: உலகின் மிக சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் அமெரிக்க துணை அதிபராக தேர்வான கமலா ஹாரிஸ் 3ம் இடத்திலும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 41வது இடத்திலும் உள்ளனர். அமெரிக்காவில் இருந்து வெளிவரும் போர்பஸ் பத்திரிகையின் உலகின் மிகவும் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியலை வருடம் தொரும் வெளியிட்டு வருகிறது.

இதன்படி, இந்தாண்டு 17-வது முறையாக ‘ஃபோர்ப்ஸ்’ நிறுவனம் ‘ஃபோர்ப்ஸ் - 2020’ உலகின் மிக சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 41வது இடத்தை பிடித்துள்ளார். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இடம்பெற்றுள்ள மத்தியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்தாண்டு 34வது இடத்தை பிடித்திருந்தார்.  

இதனைபோன்று, இந்தியாவின் எச்.சி.எல் கார்ப்பரேஷனின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் ரோஷ்னி நாடார் 55வது இடத்திலும், பயோகான் நிறுவனர் கிரண் மஜும்தார்-ஷா 68வது இடத்திலும் இடம்பெற்றுள்ளனர்.

ஜேர்மன் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் தொடர்ந்து 10வது ஆண்டாக முதலிடத்திலும், ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவரான கிறிஸ்டின் லகார்ட் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இரண்டாவது இடத்தையும், அமெரிக்க துணை அதிபராக பதவியேற்க உள்ள கமலா ஹாரிஸால் முதல் முறையாக 3வது இடத்தில் உள்ளார்.

நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் 32வது இடத்திலும், தைவானின் ஜனாதிபதி சாய் இங்-வென் 37வது  இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில், 30 நாடுகளை சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த ஆண்டு பட்டியலில் 17 புதுமுகங்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த பட்டியலில் 10 அரசியல் தலைவர்கள், 38 தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் பொழுதுபோக்கு துறையை சேர்ந்த ஐந்து பெண்கள் உள்ளனர். ஆனால் அவர்களின் வயது, நாடு மற்றும் வேலை போன்றவை வேறுபடுகின்றன. அமெரிக்க அரசியலில் கமலா ஹாரிஸ் வேகமாக வளர்ந்துவரும் பிரபலமாக உள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: