தேனி அருகே பெரியகுளத்தில் அரசு கட்டடத்திற்கான கட்டுமான பள்ளத்தில் தவறி விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழப்பு

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கட்டுமானத்துக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கி இருந்த நீரில் தவறி விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தமிழக வேளாண்துறை சார்பில் நெல் கொள்முதல் நிலையம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் மழை பெய்து வருவதால் நெல் கொள்முதல் நிலையம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை அந்த பகுதி வழியாக சென்றுகொண்டிருந்த ஹரிஷ் என்ற 6 வயது சிறுவன் அந்த பள்ளத்தில் தவறி விழுந்துள்ளார். தவறி விழுந்த சிறுவன் சிறிது நேரத்தில் பள்ளத்தில் இருந்த தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துவிட்டான்.

இது குறித்து தெரியாத உறவினர்கள், வெளியே சென்ற தனது மகன் காணவில்லையே என்று தேடிக்கொண்டிருந்த போது கட்டுமானத்துக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தது தெரிய வந்தது. தொடர்ந்து சிறுவனை மீட்டு, இந்த பள்ளத்துக்கு எந்த பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்காமல் அப்படியே பள்ளம் தோண்டி விட்டு சென்று விட்டதால் அந்த குழியில் தண்ணீர் தேங்கி இந்த சிறுவன் பலியானதால் அந்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அவரது உறவினர்கள் தேனி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் தற்போது சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை சமாதானப்படுத்தும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: