சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு திடீர் உடல் நலக்குறைவு: ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதி

சென்னை: உடல்நலக்குறைவால் முன்னாள் நீதிபதி கர்ணன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை ஆவடி ராம் நகரை சேர்ந்தவர் முன்னாள் நீதிபதி கர்ணன். இவர் நீதிபதிகள் குறித்தும், பெண் வழக்கறிஞர்கள் குறித்தும் அவதூறான கருத்துக்களை யூ-டியூபில் வீடியோக்களை பதிவு செய்திருந்தார். இதுகுறித்து தமிழ்நாடு புதுவை பார் கவுன்சில் சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் முன்னாள் நீதிபதி கர்ணன் மீது ஐபிசி 153, 509 ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு, கடந்த 2ம் தேதி முன்னாள் நீதிபதி கர்ணன் மற்றும் வீடியோ பதிவேற்றம் செய்த தனசேகரன் ஆகியோரை கைது செய்தனர்.

பின்னர் முன்னாள் நீதிபதி கர்ணன் மற்றும் அவரது உதவியாளர் தனசேகரன் ஆகியோர் வரும் 16ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைக்க உத்தரவிட்டது. அதன்படி போலீசாரும்2 பேரையும் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் நீதிபதி கர்ணன் கடந்த நான்கு நாட்களாக சரியாக உணவு சாப்பிடாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கர்ணனுக்கு நேற்று காலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதைதொடர்ந்து சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் நீதிபதி கர்ணனை சிறை காவலர்கள் மற்றும் போலீசார் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Related Stories: