ஜம்மு காஷ்மீரில் மீண்டும் வீட்டுக்காவல் மெகபூபா வீடியோ வெளியீடு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் தான் மீண்டும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக டிவிட்டர் மூலம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு  ரத்து செய்து உத்தரவிட்டது. அப்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் முதல்வர் மெகபூபா உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களில் சிலர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். ஒவ்வொருவராக விடுவிக்கப்பட்ட நிலையில் சுமார் 14  மாதங்கள் கழித்து கடந்தஅக்டோபர் 13ம் தேதி முன்னாள் முதல்வர் மெகபூபா விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் நேற்று தனது டிவிட்டர் பதிவில், “நான் மீண்டும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளேன். ஏனென்றால் பத்காமில்  நூற்றுக்கணக்கான மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களை பார்ப்பதற்காக அங்கு செல்வதற்கு விரும்பியதால் நான் தடுத்து வைக்கப்பட்டுள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதனுடன் வீடியோ ஒன்றையும் அவர் இணைத்துள்ளார். அதில் மெகபூபா வீட்டின் நுழைவு வாயில் கதவு உட்புறமாகவும், வெளிப்புறமாகவும் பூட்டப்பட்டுள்ளது. அதனை திறக்கும்படி அவர் அழைக்கிறார்.  “கதவை திறந்துவிடுங்கள்.  நான் வெளியே செல்ல வேண்டும். உங்களிடம் என்ன உத்தரவு இருக்கிறது. அதனை காட்டுங்கள்’’ என அங்கிருக்கும் பாதுகாவலர்களிடம் மெகபூபா சத்தமாக கூறுகிறார். அதற்கு யாரும் எந்த பதிலும் கூறவில்லை. இந்த வீடியோ சமூக  வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

Related Stories: