முறைப்படி அழைப்பு வராததால் தேர்தல் ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்து அதிமுகவினர் எதிர்ப்பு: கொடுங்கையூரில் பரபரப்பு

சென்னை:  அதிமுக ஆலோசனைக் கூட்டத்துக்கு முறைப்படி அழைப்பு வராததால் அக்கட்சியின் நிர்வாகிகள் மண்டபத்துக்கு செல்லாமல் நடுத்தெருவில் நின்றபடி எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அதிமுகவினர் குறிப்பிட்ட தொகுதிகளில் பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த கூட்டங்களில் தொடர்ந்து மோதல் வெடித்து வருகிறது. இந்நிலையில், வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட பெரம்பூர் சட்டமன்ற தொகுதி பாகமுகவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை கொடுங்கையூர் எருக்கஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக, அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், வழிகாட்டுதல் குழு உறுப்பினர் ஜேசிடி பிரபாகரன் கலந்து கொண்டனர்.

மண்டபத்திற்கு சற்று தொலைவில் பெரம்பூர் பகுதி செயலாளர் ஜே. கே. ரமேஷ் தலைமையில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் நின்றிருந்தனர். அந்த வழியாக கூட்டத்திற்கு சென்ற ஜேசிடி பிரபாகரனிடம், கட்சியில் எங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை.  கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை  என்றனர்.  எனவே நாங்கள் தெருவிலேயே நிற்கிறோம் என்று கூறினார். பின்னர் பெரம்பூர் பகுதி செயலாளர் ஜே கே ரமேஷ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிமுக தலைமை அலுவலகம் சென்று மாவட்ட செயலாளர் ராஜேஷை மாற்ற வேண்டுமென மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: