மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி நாடு முழுவதும் இன்று பந்த்: அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு : தமிழகத்தில் 1.25 லட்சம் போலீஸ் குவிப்பு

புதுடெல்லி: மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் இன்று நாடு தழுவிய பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும், தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. நாடு முழுவதும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்படும். மத்திய அரசு அமல்படுத்திய 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, கடந்த 26ம் தேதி முதல், டெல்லி எல்லையில் பஞ்சாப், அரியானா, உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் 12வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 3 சட்டங்களும் ரத்து செய்யப்பட வேண்டுமென்பதில் விவசாயிகள் உறுதியாக இருப்பதால், அரசு அவர்களுடன் நடத்திய 5 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, 6வது கட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெற உள்ளது.

இதனிடையே, விவசாயிகள் இன்று நாடு தழுவிய பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, இந்திய கம்யூனிஸ்ட் உள்பட முக்கிய எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இது தவிர, பல்வேறு தொழிற்சங்கங்களும், அகில இந்திய மோட்டார் வாகன காங்கிரசும் விவசாயிகளின் பந்த்துக்கு ஆதரவளித்துள்ளன. காலை 11 மணிக்கு தொடங்கும் பந்த் மாலை 3 மணியுடன் முடிவடைகிறது. போராட்டத்தின் போது, விவசாயிகள் தேசிய நெடுஞ்சாலைகளையும், சுங்க சாவடிகளையும் முடக்கப் போவதாக அறிவித்துள்ளனர். பந்த் போராட்டத்தையொட்டி டெல்லியில் அனைத்து எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. அங்கு தடுப்புகள் அமைத்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் பல்வேறு தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் குதிக்கும் என்பதால், 1.25 லட்சம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 18 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இன்று ஆர்பாட்டம் செய்ய கம்யூ.

கட்சிகள் திட்டமிட்டுள்ளன. தடையை மீறி போராட்டம் நடத்துகிறவர்களை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றாலும் ரயில் போக்குவரத்து தடைபடாது என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். மேற்கு வங்கத்தில் பந்த் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க முடியாது என கூறியுள்ள அம்மாநில முதல்வர் மம்தா, விவசாயிகளின் கோரிக்கைக்கு ஆதரவு தருவதாக கூறி உள்ளார்.  கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நடப்பதால் முழு அடைப்பு போராட்டத்தை நடத்தப் போவதில்லை என்று கம்யூனிஸ்டு அரசு அறிவித்துள்ளது. பந்தையொட்டி, மத்திய உள்துறை அமைச்சகம்  அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பிய கடிதத்தில்,  பந்த்தின் போது, எவ்வித அசம்பாவிதங்களும் நிகழாமல் தடுக்கவும், பந்த்  அமைதியான முறையில் நடைபெறவும் தேவையான கூடுதல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பழைய சட்டம் வேண்டும்

பந்த் குறித்து விவசாயிகள் போராட்டக் குழு தலைவர் பல்பிர் சிங் ரஜிவால் கூறுகையில், ‘‘அமைதியான, அகிம்சை வழியில் போராட்டம்  நடைபெறும். இப்போராட்டத்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காகவே காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை என போராட்ட நேரத்தை தேர்ந்தெடுத்துள்ளோம். மத்திய அரசுக்கு எங்களின் எதிர்ப்பை காட்டும் அடையாளமாக இப்போராட்டம் நடக்கிறது. எனவே, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர சேவைகள் பாதிக்காத வகையில் பந்த் நடைபெறும். மத்திய அரசு எங்கள் கோரிக்கையை ஏற்க வேண்டும். புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்வதை விட வேறு பேச்சுவார்த்தைக்கே இடமில்லை. பழைய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு கெடுதலானவை என அரசு நினைத்தாலும் பரவாயில்லை. அச்சட்டங்களே எங்களுக்கு வேண்டும்’’ என்றார்.

பெருகும் ஆதரவு

டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு பல முக்கிய பிரமுகங்கள் பல்வேறு வழிகளில் ஆதரவு அளித்து வருகின்றனர். டெல்லியில் இரவு நேரங்களில் நிலவும் கடும் குளிரை தாங்க, போராட்ட களத்தில் உள்ள விவசாயிகள் அனைவருக்கும் போர்வை வாங்க பஞ்சாபி பாடகர் தில்ஜித் தோசன்ஜி ரூ.1 கோடி நன்கொடையாக கொடுத்துள்ளார். விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, பஞ்சாப் முன்னாள் முதல்வரான பிரகாஷ் சிங் பாதல் தனக்கு வழங்கப்பட்ட பத்ம விபூஷண் விருதை சமீபத்தில் திருப்பி தந்த நிலையில், குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெறாவிடில், தனக்கு அளிக்கப்பட்ட கேல் ரத்னா விருதை திருப்பி அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related Stories: