நெல்லை ராமையன்பட்டியில் ரூ.4.68 கோடியில் காய்கறி பதப்படுத்தும் நிலையம்: கலெக்டர் ஆய்வு

நெல்லை: நெல்லை ராமையன்பட்டி சேமிப்பு கிடங்கு வளாகத்திற்குள் தமிழ்நாடு விநியோக தொடர் வேளாண்மை திட்டத்தின் கீழ் ரூ.4.68 கோடி மதிப்பில் செயல்பட்டு வரும் முதன்மை பதப்படுத்தும் நிலையத்தை கலெக்டர் விஷ்ணு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் கூறுகையில், வேளாண் உற்பத்தியை பெருக்கவும், விற்பனை உபரியை உயர்த்தவும், சிறந்த பண்ணை மேலாண்மை வழிமுறைகளை விவசாயிகள் அறியச் செய்தல்,    விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைப்பதை உறுதி செய்தல் மற்றும் உற்பத்தி உபரியை மதிப்புக் கூட்டிய பொருளாக மாற்றுதல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இத்திட்டத்தின் மூலம் முதன்மை பதப்படுத்தும் நிலையத்தில் சிப்பம் கட்டும் அறை, குளிர்பதனக் கிடங்கு,  தரம் பிரித்தல் மற்றும் சிப்பம் கட்டும் வசதிகள், சேமிப்புக் கிடங்குகள், விவசாயிகள் பயிற்சி நிலையம் மற்றும் பல உட்கட்டமைப்பு வசதிகள் முதன்மை பதப்படுத்தும் நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள காய்கறிகள் பயிரிடும் அனைத்து விவசாயிகளும் நெல்லை மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறையை தொடர்பு கொண்டு தாங்கள் பயிரிட்டுள்ள காய்கறிகளை நேரடியாக உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு வழங்கி கூடுதல் லாபம் அடையலாம் என்றார். ஆய்வின் போது நெல்லை தாசில்தார் பகவதி பெருமாள், பதப்படுத்தும் நிலைய கண்காணிப்பாளர் முத்துராஜா உடனிருந்தனர்.

Related Stories: