தேவகோட்டையில் கோயில் முன்பு குளம்போல் தண்ணீர்; வீட்டை விட்டு வெளியேற வர முடியாமலும் அவதி

தேவகோட்டை: தேவகோட்டையில் கோயில் முன்பு மழைநீர் குளம்போல் தேங்கி கிடப்பதால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தேவகோட்டை திண்ணன்செட்டியார் ஊருணி வடகரையில் கோட்டை அம்மன் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோயில் சுற்றுப்பகுதியில் பக்தர்கள் வசதிக்காக தற்போது பேவர்பிளாக் கற்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர்மழையால், இப்பணி நடந்து வரும் பகுதி முழுவதும் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

இதன் காரணமாக இப்பகுதி மக்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேற முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த ஜின்னா கூறுகையில், ‘கோயில் முன்பாக பேவர் பிளாக் கற்கள் பதிப்பது நல்ல காரியம் தான். ஆனால் பணிகளை ஆமை வேகத்தில் செய்வதால் தோண்டிய பள்ளங்களில் மழைநீர் தேங்கி இங்கு வசிப்பவர்கள் வெளியேற முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. எனவே பணியை விரைந்து முடித்து மக்களின் சிரமத்தை போக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: