மன்னார் வளைகுடாவில் நிலைகொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது: வானிலை மையம் தகவல்.!!!

சென்னை: வங்கக்கடலில் கடந்த மாதம் 21ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ‘நிவர் புயலாக’ புதுச்சேரிக்கும், மரக்காணத்துக்கும் இடையே கடந்த 25ம் தேதி நள்ளிரவில் கரையை கடந்தது. இந்த, புயலால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. பல லட்சம் ஏக்கர் விவசாய பயிர்கள் நீரில் மூழ்கி, பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. மக்கள் இயல்பு நிலைக்கு திரும்புவதற்குள், வங்கக்கடலில் இன்னொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது. ‘புரெவி’ என்ற பெயரிட்ட புயலால் தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் வடகடலோர மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது.

குறிப்பாக சென்னையில் கடந்த 3 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது. அதன் பிறகு தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. இதற்கிடையே, காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் நீடித்து வருகிறது. அது அடுத்து 12 மணி நேரத்தில் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் நீடிக்கக்கூடும். இதனால், இன்றும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது.

இந்நிலையில், மன்னார் வளைகுடாவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து அதே இடத்தில் நீடித்து வருகிறது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, கேரளா பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மட்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: