4வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி, ஓபிஎஸ் அஞ்சலி

சென்னை: ஜெயலலிதா மறைந்து நேற்றோடு நான்கு ஆண்டு நிறைவடைகிறது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அதிமுக தொண்டர்கள், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட பலர் பேரணியாக சென்று மலர் அஞ்சலி செலுத்தினார்கள். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி இரவு சென்னை, ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 75 நாட்கள் மருத்துவமனையிலேயே தங்கி சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி இரவு மரணம் அடைந்தார். நேற்று ஜெயலலிதாவின் 4வது ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.

இதையொட்டி அதிமுக சார்பில்  ஜெயலலிதா சமாதிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம், மூத்த தலைவர்கள் மதுசூதனன், கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி,  வேலுமணி, ஜெயக்குமார், விஜயபாஸ்கர், காமராஜ், ஆர்.பி.உதயகுமார், கடம்பூர்  ராஜூ மற்றும் அமைச்சர்கள், அதிமுக தலைமை கழக நிர்வாகிகள்,  எம்பி, எம்எல்ஏக்கள் நேற்று காலை 11 மணிக்கு ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அவர்களை தொடர்ந்து பல்வேறு கட்சி தலைவர்கள், அதிமுக  தொண்டர்கள், பொதுமக்களும் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து, நினைவிடம் அருகே அமைக்கப்பட்டிருந்த தனி மேடையில் நின்றபடி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிமொழி வாசிக்க முதல்வர், அமைச்சர்கள், தொண்டர்கள் திரும்ப கூறி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், அதிமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கறுப்பு சட்டை அணிந்திருந்தனர். இவர்களை தொடர்ந்து, அமமுக  பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில்  அக்கட்சியினர் ஊர்வலமாக வந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி  செலுத்தினார்கள். பாஜ சார்பில் மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி தலைமையில் நிர்வாகிகள் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவர்களது இல்லத்தில் நேற்று காலை ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் ஜெயலலிதா உருவ படத்தை வைத்து, அதிமுகவினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Related Stories: