கடமலைக்குண்டு அருகே 16ம் நூற்றாண்டு நடுகல்

வருசநாடு :தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியர் செல்வம், தொல்லியல் சான்றுகளை கண்டறிந்து ஆவணப்படுத்தி வருகிறார். இவர், கடமலைக்குண்டு அரசுப்பள்ளி பின்புறம் உள்ள கன்னிமார்கோயில் மலைப்பகுதியில் 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘கடமலைக்குண்டுவுக்கு கிழக்குப்புறம் நந்தவனம் செல்லும் பகுதியில் விவசாய நிலத்தில் சிதைந்த நிலையில் நடுகல் காணப்படுகிறது. இக்கல்லின் வலது பக்கம் இருக்கும் வீரனின் தலைப்பகுதி உடைந்து காணப்படுகிறது. இடது கையில் துப்பாக்கி உள்ளது. இடது பக்கம் இருக்கும் வீரனின் முகம் சிதைந்துள்ளது. அவ்வீரன் இரு கைகளையும் கூப்பி வணங்கியபடி, இடுப்பில் இரும்பு குண்டை தொங்க விட்டு, இரண்டு கால்களும் சங்கிலியால் பிணைக்கப்பட்டது போல காணப்படுகிறது.

இருவருமே குறுநில மன்னர்களாகவோ அல்லது இப்பகுதியில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகவோ இருந்திருக்கலாம். ஏதோ ஒரு காரணம் கருதி இவ்விருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் வெற்றி பெற்றவர், தோல்வியுற்றவரை விலங்கிட்டு, பணிந்து வணங்கி செய்த காட்சி நினைவுக் கல்லாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்க மன்னர்களின் ஆட்சி காலத்தில் நடப்பட்ட நினைவுக் கல்லாக இருக்கும் என கருதப்படுகிறது. வரலாற்றுப் பழமைவாய்ந்த சான்றுகள் அழிந்து போவதற்கு முன், அரசு கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: