டெல்லியில் 10-வது நாளாக போராடி வரும் விவசாயிகள் போராட்டத்தை கைவிடுவார்களா?: மத்திய அரசு இன்று 5-ம் கட்ட பேச்சுவார்த்தை.!!!

புதுடெல்லி: டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று 5-ம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறது. மத்திய அரசு கொண்டு வந்த 3  வேளாண் சட்டங்களை எதிர்த்து ‘டெல்லி சலோ’ என்ற போராட்டத்தை பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் முன்னெடுத்தனர். டெல்லி நோக்கி பேரணியாக சென்ற ஆயிரக்கணக்கான விவசாயிகள், டிராக்டர், லாரிகளுடன் டெல்லி  எல்லையில் உள்ள புறநகர் பகுதிகளில் முகாமிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுடன் பல்வேறு மாநில விவசாயிகளும் கைகோர்த்துள்ளனர்.விவசாயிகளின் போராட்டத்தை கைவிடுமாறு, மத்திய அரசு அவர்களுடன்  பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு கடந்த 1ம் தேதியும், நேற்று முன்தினமும் நடத்திய 4 சுற்று பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. நேற்று முன்தினம் 8 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையின்போது, 2 வேளாண்  சட்டங்களில் மட்டும் 8 திருத்தங்களை மேற்கொள்ள தயாராக இருப்பதாக மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வாக்குறுதி அளித்துள்ளார். மேலும், குறைந்தபட்ச ஆதார விலை ஒருபோதும் மாற்றப்படாது என்றும் கூறினார்.  ஆனால், புதிய சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

ஏற்கனவே 4-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், மத்திய அரசு இன்று 5-ம் கட்டமாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. 5-ம் கட்டமாக இன்று, விவசாய சங்கங்களின் தலைவர்களுடன் மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. டெல்லி எல்லையில் இன்று தொடர்ந்து 10வது நாளாக விவசாயிகள் போராட்டம் தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: