வேளாண் சட்டங்களை ஆதரித்து பேச்சு : முதல்வர் பழனிசாமிக்கு விவசாயிகள் கண்டனம்

திருச்சி, :வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெறக்கோரி டெல்லியில் பஞ்சாப், அரியானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் இன்று 9ம் நாளாக போராட்டம் நடத்திவருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்திலும் போராட்டம் வலுத்து வருகிறது.

இந்நிலையில் சேலத்தில் நேற்று பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசின் வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஏஜெண்டுகள் தான் போராட்டத்தை தூண்டுகிறார்கள் என தெரிவித்துள்ளது தமிழக விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வரின் இந்த பேச்சுக்கு விவசாய சங்க தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொது செயலாளர் பி.ஆர் பாண்டியன்: போராடும் விவசாயிகளை ஏஜென்ட் எனக் கூறியிருப்பது போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளை கொச்சைபடுத்துவதாகும். இதன் பின்விளைவு தெரியாமல் முதல்வர் பேசிவருகிறார். எந்த வகையில் சட்டம் விவசாயிகளுக்கு பலனளிக்கும் என முதல்வர் ஆதாரத்தோடு விளக்க வேண்டும்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு: மத்திய அரசு தயவு வேண்டும் என்பதற்காக முதல்வர் தவறான செய்திகளை கூறுகிறார். இந்த சட்டத்தில் லாபகரமான விலைபற்றி சொல்லவில்லை. இதனால் விவசாயிகள் தான் முற்றிலும் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் பாதித்தால் உணவு உற்பத்தி இருக்காது. எனவே முதல்வர் வீட்டு முன் எலிகறி தின்று விரைவில் போராட்டம் நடத்த உள்ளோம். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சாமி நடராஜன்:

இச்சட்டம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமானது. இந்த சட்டங்களை, தமிழக முதல்வர் ஆதரித்து பேசுவது போராடும் விவசாயிகளை கொச்சைப்படுத்துவதாகவும், உண்மைக்கு புறம்பாகவும் உள்ளது. இதற்கு முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்.  ஆட்சி அதிகாரத்தை பாதுகாக்கவும், வழக்குகள் வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் அவர் அப்படி பேசியுள்ளார். விவசாயிகள் சார்பில் நாளை விவசாயிகள், மோடி, அம்பானி, அதானி உருவபொம்மைகளை எரித்து போராட்டம் நடத்த உள்ளோம். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் வரும் 9ம் தேதி முதல் கலெக்டர் அலுவலகங்கள் முன் காத்திருப்பு போராட்டம் நடைபெறும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: