புரெவி புயல் எதிரொலி.: மதுரை விமான நிலையம் இன்று நண்பகல் 12 மணி வரை தற்காலிகமாக மூடல் என அறிவிப்பு

சென்னை: புரெவி புயல் காரணமாக மதுரை விமான நிலையம் இன்று நண்பகல் 12 மணி வரை தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும் மதுரை விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் நண்பகல் 12 மணிக்கு மேல் விமான சேவைகள் வழக்கம் போல செயல்படும் என கூறியுள்ளனர். தமிழகத்தை மிரட்டும் புரெவி புயல் காரணமாக பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகிறது.

சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு நேற்று செல்ல வேண்டிய 3 விமானங்களும், அதேபோல் தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு வரவேண்டிய 3 விமானங்களும் நேற்று ரத்து செய்யப்பட்டன. மேலும் சென்னையிலிருந்து திருச்சி செல்லும் 2 விமானங்கள், திருச்சியிலிருந்து சென்னை வரும் 2 விமானங்கள் என மொத்தம் 4 விமானங்களும் ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்து இருந்தனர்.

அதனையடுத்து சென்னையிலிருந்து கொச்சி செல்லும் ஒரு விமானம், கொச்சியிலிருந்து சென்னை வரும் ஒரு விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளன. புரெவி புயல் காரணமாக சென்னை விமானநிலையத்தில் நேற்று ஒரே நாளில் 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதேபோல் புரெவி புயல் தீவிரத்தை கருத்தில் கொண்டு தூத்துக்குடி மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களும் இன்று முழுவதும் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: