மாலேகான் வெடிகுண்டு வழக்கு பாஜ எம்பி பிரக்யா ஆஜராகவில்லை

மும்பை:  மும்பை அருகேயுள்ள மாலேகானில் கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் 29ல் மசூதி அருகே மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்ட குண்டு திடீரென வெடித்தது. இந்த வெடிகுண்டு விபத்தில் 6 பேர் கொல்லப்பட்டனர். 100 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பான வழக்கு மும்பையில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பின் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை முன்னதாக விசாரித்த நீதிபதி பிஆர் சித்ரே வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பாஜ எம்பியும் பெண் சாமியாருமான பிரக்யா சிங் தாகூர் மற்றும் லெப்டினன்ட் பிரசாத் புரோகித் உள்ளிட்டோரை நேற்று ஆஜராக உத்தரவிட்டிருந்தது.இதில் பிரக்யா தாகூர் மற்றும் 3 பேர் நேற்று விசாரணைக்கு ஆஜராகவில்லை. 3 பேர் மட்டுமே நேற்று வழக்கு விசாரணையின்போது ஆஜராகினர். இதையடுத்து ஆஜராகாத குற்றவாளிகளின் வக்கீல்கள் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகி கூறுகையில் `கொரோனா தொற்று நிலவரம் காரணமாகவே தங்கள் கட்சியினர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை’ என்று விளக்கம் அளித்தனர். இதையடுத்து அனைத்து குற்றவாளிகளும் டிசம்பர் 19ம் தேதி நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராகவேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

இதற்கிடையே மும்பை உயர்நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான லெப்டினன்ட் கலோனல் பிரசாத் புரோகித் சார்பில் தனது மீதான குற்றச்சாட்டை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் எஸ்எஸ் ஷின்டே மற்றும் எம்எஸ் கார்னிக் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. உயர்நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு சார்பில் வக்கீல் சந்தேஷ் பாட்டீல் ஆஜரானார். அரசு சார்பில் ஆஜராகி வரும் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்ஹி நேற்று ஆஜராகாததால் விசாரணையை தள்ளிவைக்கவேண்டும் என்று புரோகித்தின் வக்கீல் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து வழக்கு விசாரணை வரும் 14ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories: