புரெவி புயல் எதிரொலி; கடல் மீன்வரத்து சரிவு: விலை ரூ50 வரை அதிகரிப்பு

சேலம்: புரெவி புயல் எதிரொலியாக தூத்துக்குடி, கன்னியாகுமரியில் இருந்து சேலத்திற்கு கடல் மீன் வரத்து அடியோடு சரிந்தது. இதனால், மீன் விலை கிலோவிற்கு ரூ50 வரை அதிகரித்துள்ளது. சேலம் வஉசி மீன் மார்க்கெட்டிற்கு தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகை மற்றும் கேரளாவில் இருந்து டன் கணக்கில் கடல் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. புரெவி புயல், ராமேஸ்வரம் பாம்பன், கன்னியாகுமரி இடையே நாளை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்ததால், மீனவர்கள் கடலுக்கு  மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால், கடல் மீன் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. சேலம் மீன் மார்க்கெட்டிற்கு கடந்த 2 நாட்களாக தூத்துக்குடி, கன்னியாகுமரியில் இருந்து கடல் மீன் வரத்து அடியோடு நின்றுள்ளது.

இதனால், கேரளாவில் இருந்து குறைந்த அளவில் வரும் கடல் மீன்களை வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். இதன் காரணமாக மீன்களின் விலை கிலோவிற்கு ரூ50 வரை அதிகரித்துள்ளது. விளா மீன் கிலோ ரூ400க்கும், முறல் மீன் ரூ280க்கும், பாறை ரூ380க்கும், வாவல் மீன் ரூ550க்கும், மடவா மீன் ரூ350க்கும், செங்கடுவா மீன் ரூ320க்கும் விற்கப் படுகிறது. வஞ்சரம் மீன்வரத்து இல்லை. இன்னும் ஒரு வாரத்திற்கு கடல் மீன் வரத்து மிக குறைவாகவே இருக்கும் எனவும், இதனால் விலை சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் கூறினர்.

Related Stories: