புரெவி புயலால் அதீத கனமழைக்கு வாய்ப்பு : தமிழகம், கேரளா, புதுச்சேரியில் 26 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளன..!

சென்னை : இலங்கையின் திருகோணமலைக்கு வடக்கே கரையை கடந்த புரெவி புயல் பாம்பனை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கேரளாவின் திருவனந்தபுரம், கொல்லம், பதனம்திட்டா, ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

இதனால், மீட்பு பணிகள் மேற்கொள்ள, ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு மையத்திலிருந்து, 26 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. தமிழகத்தில் 17 தேசிய பேரிடர் மீட்பு குழுக்களும், கேரளாவில் 08 குழுக்களும், பாண்டிச்சேரியில் ஒரு குழுவும் தயார் நிலையில் உள்ளன. சென்னையில் 2 குழுக்களும், ராணிப்பேட்டையில் 1 குழுவும், கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், மதுரையில் தலா ஒரு குழுவும் தயார் நிலையில் உள்ளன. ராமநாதபுரம், நெல்லையில் 3 குழுக்களும், கன்னியாகுமரி,தூத்துக்குடியில் 2 குழுக்களும் தயார் நிலையில் உள்ளன.

இதில், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், கடலூர், மதுரை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு, 17 குழுவினரும், புதுச்சேரி, காரைக்காலுக்கு இரண்டு, கேரளா மாநிலம், இடுக்கி, எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழை, பத்தனம் திட்டா, கொல்லம், திருவனந்தபுரத்துக்கு எட்டு குழுவினரும், நேற்று மாலை மீட்பு உபகரணங்களுடன் சென்றுள்ளனர். இது குறித்து, அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை, சீனியர் கமான்டென்ட் ரேகா கூறுகையில், மீட்பு பணிக்கு எப்போது அழைத்தாலும், மேலும், 26 குழுக்கள் தயாராக உள்ளன, என்றார்.

Related Stories: