மக்களிடம் குறைகளை கேட்க மாவட்ட கலெக்டருக்கு முழு உரிமை: மக்களவை உறுப்பினர் பிரதாப்சிம்ஹா விளக்கம்

மைசூரு: மக்கள் குறைகளை கேட்க மாவட்ட கலெக்டருக்கு முழு உரிமை உள்ளது. யாரிடமும் அனுமதி கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று மக்களவை உறுப்பினர் பிரதாப்சிம்ஹா தெரிவித்தார். மைசூரு மாவட்ட கலெக்டர் ரோகிணிசிந்தூரி மக்கள் குறைகேட்பு கூட்டம் நடத்திய போது மக்கள் பிரதிநிதிகளை அழைக்கவில்லை என கூறப்படுகிறது. இதற்கு மக்கள் பிரதிநிதிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், கலெக்டருக்கு எதிராக பேரவை செயலாளரிடம் புகார் அளிப்போம் என தெரிவித்தனர். இந்தநிலையில், மக்கள் பிரதிநிதிகளுக்கு எந்த தொகுதியும் யாரும் எழுதி கொடுக்கவில்லை. இதனால் மாவட்ட கலெக்டர் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடத்துவதற்கு அவர்களின் அனுமதி தேவையில்லை என்று மக்களவை உறுப்பினர் பிரதாப்சிம்ஹா தெரிவித்தார்.

இது தொடர்பாக மைசூருவில் அவர் கூறியதாவது: தொகுதி மக்களின் பிரச்னைகளை கேட்க மாவட்ட கலெக்டருக்கு அனைத்து உரிமைகளும் உள்ளது. இதற்காக அவர் யாரிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியம் கிடையாது. மக்கள் பிரதிநிதிகள் என்பது மக்களுக்கு சேவை செய்வது, அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுத்தி கொடுக்கும் பணிகள் செய்வது மட்டுமே. மாவட்ட கலெக்டர் மக்களிடம் சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருவதற்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும். அதை விட்டு அவர் மீது குற்றசாட்டுகள் தெரிவிப்பது தேவையற்றது. மக்கள் பிரதிநதிகள் செய்ய வேண்டிய வேலைகளை மாவட்ட கலெக்டர் செய்து வருகிறார். அதற்கு வழி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அதை விட்டு கலெக்டர் மீது தேவையில்லாத குற்றசாட்டுகள் தெரிவிப்பது சரியில்லை.

அதேபோல், மாவட்ட கலெக்டர் ரோகிணிசிந்தூரி மீது உரிமை மீறல் கொண்டு வருவதாக சிலர் தெரிவித்துள்ளனர். நான்கு முறை எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகள் முதலில் உரிமை மீறல் என்றால் என்ன என்பதை குறித்து புத்தகத்தில் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளுக்கு மேடையில் இருக்கை வழங்கவில்லை என்பதற்காக உரிமை மீறல் கொண்டு வர முடியாது. கலெக்டர் என்பவர் மக்களிடம் சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இந்த பணியை ரோகிணிசிந்தூரி செய்து வருகிறார். இந்த பணிக்கு யாரும் இடையூறு செய்யக்ககூடாது. கிராம பஞ்சாயத்து தேர்தல் முடிந்த பின்னர் நான் மக்களிடம் சென்று குறைகளை கேட்க முடிவு செய்துள்ளேன். அப்போது யார் தடுப்பார்கள் என்று பார்க்கலாம் என்றார். மக்கள் பிரதிநிதிகள் முதலில் உரிமை மீறல் என்றால் என்ன என்பது குறித்து புத்தகத்தில் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

Related Stories: