நடிகை கங்கனாவுடன் ஏற்பட்ட மோதலுக்கு பின் காங்கிரசில் எம்எல்சி ‘சீட்’ தரேன்னு சொன்னாங்க!: சிவசேனாவில் இணைந்த ஊர்மிளா பரபரப்பு பேட்டி

மும்பை: நடிகை கங்கனாவுடன் ஏற்பட்ட மோதலுக்கு பின் காங்கிரசில் எம்எல்சி ‘சீட்’ தருவதாக சொன்னார்கள் என்று, சிவசேனாவில் இணைந்த ஊர்மிளா பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். கடந்தாண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் வடக்கு  மும்பை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பாலிவுட் நடிகை ஊர்மிளா போட்டியிட்டார். ஆனால், பாஜக வேட்பாளர் கோபால் ஷெட்டியிடம் ஊர்மிளா தோல்வி அடைந்தார். அடுத்த சில மாதங்களில் காங்கிரஸ் கட்சியிலிருந்தே ஊர்மிளா  விலகினார். அதன்பின் அரசியலில் எந்தவிதமான கருத்துகளையும் தெரிவிக்காமல் ஒதுங்கியே இருந்தார். இதற்கிடையே மகாராஷ்டிர கவுன்சில் தேர்தலில் 12 வேட்பாளர்களில் சிவசேனா வேட்பாளராக ஊர்மிளா பெயரும் சேர்க்கப்பட  வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டது.

ஆனால், அந்தப் பட்டியல் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரிடம் கிடப்பில் உள்ள நிலையில், நேற்று சிவசேனா கட்சியில் முதல்வர் உத்தவ் தாக்கரே முன்னிலையில் ஊர்மிளா இணைந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘காங்கிரஸ் கட்சி சார்பில்  மகாராஷ்டிராவில் ஒரு எம்எல்சி சீட் ஒதுக்கி தருவதாக கூறப்பட்டது. ஆனால், மறுத்துவிட்டேன். 2019 மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்ததால், நான் காங்கிரசை விட்டு வெளியேறவில்லை. காங்கிரஸ் உள்ளூர் அரசியல் பிரச்னைகளை  என்னால் கையாள முடியவில்லை. இருப்பினும், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி போன்ற மூத்த தலைவர்களிடம் எனக்கு மரியாதை உண்டு.

நான் பிறப்பால் ஒரு இந்து. நான் மிகவும் மத நம்பிக்கை உடையவள். சிவசேனா ஒரு இந்து கட்சி; ஆனால் அது எல்லோருக்கும் நல்லது செய்யும் கட்சியாக உள்ளது. நடிகை கங்கனாவுக்கு எதிராக நான் கருத்து கூறியதால், என்னை சிவசேனா  கட்சி அழைத்ததாக கூறுவது தவறு. மேலும், அதற்காக எம்எல்சி பதவி கொடுக்கப்படுகிறதா? என்பதும் தவறு. இதுகுறித்து மீண்டும் பேசுவது, அந்த பிரச்னைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மாதிரியாகிவிடும்’ என்றார்.

சமீபத்தில் மும்பை நகரை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று பாலிவுட் நடிகை கங்கனா கூறியதற்குக் கடும் கண்டனத்தை ஊர்மிளா பதிவு செய்தார்.

அப்போது ஊர்மிளா பதிவிட்ட கருத்தில், ‘மும்பை நகரை அவதூறாகப் பேசுவதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. நடிகை கங்கனாவுக்கு ஏன் ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. வரிசெலுத்துவோரின் பணம் ஏன் வீணடிக்கப்பட  வேண்டும்’ எனக் கண்டித்தார். இதனால், நடிகை ஊர்மிளாவை மோசமான வார்த்தைகளால் கங்கனா விமர்சித்தார். பிறகு மன்னிப்பு கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: