தாதா சுந்தர் பாத்தி கூட்டாளியின் 25 கோடி சொத்து முடக்கம்: நொய்டா போலீஸ் அதிரடி

நொய்டா: பிரபல தாதா சுந்தர் பாத்தியின் கூட்டாளிக்கு சொந்தமான 25 கோடி சொத்துகளை நொய்டா போலீசார் அதிரடியாக முடக்கி உள்ளனர்.தாதா சுந்தர் பாத்திக்காக நொய்டா, கிரேட்டர் நொய்டா உள்ளிட்ட மேற்கு உத்தரப்பிரதேச மாநிலத்தில் பல்வேறு சட்டவிரோத, திரைமறைவு  குற்றங்களில் ஈடுபட்டவர் நிஜாமுதீன். முனிம், நிஜாம் என மாற்று பெயர்களும் அவருக்கு உள்ளது. சுந்தர் கும்பலில் மிகவும் சுறுசுறுப்பான நபராக  அடையாளம் காணப்பட்டவர். குண்டர் சட்டத்திலும் சுந்தர், நிஜாம் ஆகியோர் மீது வழக்கு உள்ளது. கழிவுப்பொருள் ஏஜென்ட் (ஸ்கிராப் டீலர்) என  தனக்கு ஒரு தொழில் அமைத்துக் கொண்டு, மாபியா கும்பல்களை ஏவி பல்வேறு கார்ப்பரேட் தொழில் நிறுவனங்களை அச்சுறுத்தி கழிவுப் பொருட்கள்  அகற்றல் ஒப்பந்தங்களை வாங்கி கோடிகளில் பணம் பார்த்து வந்தார்.

இந்நிலையில், கான்பூர் அடுத்த கிராமத்தில் தாதா விகாஸ் துபே கும்பலால் துணை கமிஷனர் உள்பட 8 போலீசார் துப்பாக்கியால் சுட்டு படுகொலை  செய்யப்பட்டதை அடுத்து, தாதா கும்பல்களை கடுமையாக ஒடுக்கும்படி போலீசுக்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த ஜூலையில்  உத்தரவிட்டார். அதையடுத்து தாதா களையெடுப்பு அம்மாநிலத்தில் படுதீவிரம் ஆகியுள்ளது.அந்த வகையில், முறைகேடாக நிஜாமுதீன் சேர்த்துள்ள 2.98 ஹெக்டேர் பரப்பு நிலத்தை குண்டர் சட்டத்தில் கவுதம் புத்தா நகர் மாவட்ட போலீசார்  முடக்கி உள்ளதாக கிரேட்டர் நொய்டா காவல்துறை துணை கமிஷனர் ராஜேஷ் குமார் சிங் தெரிவித்தார். முடக்கப்பட்ட சொத்தின் மதிப்பு 25 கோடி  என கூடுதல் தகவல் அளித்த சிங், மாபியா கும்பல்களிடம் இருந்து முதல்வர் உத்தரவுக்குப் பின் இதுவரை 69 கோடி சொத்துகள் முடக்கப்பட்டு  உள்ளதாகவும் கூறினார்.

Related Stories: