திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே நிவர் புயலால் விளை நிலத்திலேயே சின்ன வெங்காயம் அழுகியது. இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை அடுத்த புனல்காடு கிராமத்தில் 15 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சின்ன வெங்காயம் (சம்பார் வெங்காயம்) சாகுபடி செய்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக சின்ன வெங்காயம் நல்ல விலைக்கு விற்பனையாகிறது. பெரிய வெங்காயம் விலை வீழ்ச்சியடையும் காலங்களில் கூட சின்ன வெங்காயம் விலை குறிப்பிடத்தக்க அளவில் குறைவதில்லை. எனவே, ஓரளவு லாபம் கிடைப்பதால் சின்ன வெங்காயம் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர்.