கொரோனா விழிப்புணர்வுக்காக 48 மணிநேரம் சிலம்பம் சுற்றி சாதனை

திருமங்கலம்: கொரோனா விழிப்புணர்வு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் தொடர்ந்து 48 மணிநேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைக்கப்பட்டது. லீ சாம்பியன் மார்சியல் ஆர்ட்ஸ் சார்பில் சோழன் உலக சாதனை புத்தகத்திற்காக தொடர்ந்து 48 மணிநேரம் சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கடந்த 27ம் தேதி மாலை துவங்கியது. பிகேஎன் கல்லூரியில் உள்அரங்கில் துவங்கிய இந்த உலக சாதனை நிகழ்ச்சியை கல்லூரி தலைவர் விஜயராஜன் துவக்கி வைத்தார். 9 மாணவிகள், 21 மாணவர்கள் என மொத்தம் 30 பேர் கலந்து கொண்டு சிலம்பம் சுற்றினர்.

7 பேர் வீதம் குழுக்களாக பிரிந்து தொடர்ந்து 48 மணிநேரம் சிலம்பம் சுற்றினர். ஒரு குழுவில் 2 ஜூனியர் வீரர்களும், 5 சீனியர் வீரர்களும் இடம்பெற்றனர். கொரோனா விழிப்புணர்வு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும நோக்கத்தில் இடைவிடாது சிலம்பம் சுற்றி புதிய உலக சாதனை படைத்தனர். நேற்று மாலை 6 மணிக்கு சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி நிறைவுக்கு வந்தது. தொடர்ந்து பரிசளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு உலக சோட்டாகான் காராத்தே சம்மேளன தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். திருமங்கலம் டிஎஸ்பி விநோதினி மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், பதக்கம் வழங்கினார்.

சோழன் உலக சாதனை புத்தக நிறுவனர் நிமலன் நீலமேகன் மாணவர்களை வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட கராத்தே தலைவர் எபினேசர் சார்லஸ், சிலம்பம் மற்றும் வளரி பயிற்சியாளர் முத்துமாரி, சிலம்பம் பயிற்சியாளர்கள் நவாஸ்செரிப், சுபாஸ், விக்னேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உலக சோட்டகான் காரேத்தே தமிழ்நாடு தலைவர் பால்பாண்டியன் செய்திருந்தார்.

Related Stories: