சென்னை புறநகர் பகுதிகளில் வடியாத வெள்ளம்...விடியாத சோகம்: வீடுகள் தீவானதால் மக்கள் பரிதவிப்பு

சென்னை: காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்து ஐந்து நாட்களுக்கும் மேலாக வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக, பொதுமக்கள் மிகவும் பரிதவிப்புக்கு ஆளாகினர். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு வாரமாக கனமழை பெய்தது. சில நாட்களுக்கு முன் நிவர் புயலால் காற்றுடன் பலத்த மழை கொட்டியதால் வீடுகளில் மழைநீர் தேங்கியது. மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது. ஒருசில பகுதிகளில் இயல்பு நிலை திரும்பினாலும் பெரும்பாலான பகுதிகளில் இன்னமும் மழைவெள்ளம் வடியாமல் மக்கள் தவிக்கின்றனர். காஞ்சிபுரம்  நகராட்சிக்கு உட்பட்ட பழைய ரயில் நிலையம், மாகாளியம்மன் கோயில் தெருவில் உள்ள வீடுகளை கடந்த ஐந்து நாளுக்கு மேலாக மழைநீர் சூழ்ந்துள்ளது. இவற்றுடன் கழிவுநீரும் சேர்ந்துவிட்டதால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. காமாட்சி அம்மன் கோயில் தெருவில் பழைய ரயில் நிலையம் எதிரில்  மழைநீருடன் கழிவுநீர் தேங்கியுள்ளது. மலையாளத் தெரு, பெரியார் நகரை அடுத்த  அகத்தியர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் முழுவதுமாக வெளியேறாமல் தேங்கி  உள்ளது. இதனால் இந்த பகுதியில் வசிக்கும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தவிக்கின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உட்பட்ட் திம்மாவரம் ஊராட்சிக்கு உட்பட்ட மகாலட்சுமி நகர், பவானி நகர்,  மேலமய்யூர் ஊராட்சிக்கு உட்பட்–்ட ராமகிருஷ்ணா நகர், பவானி நகர், வைபவ் நகர் மற்றும் ஆலப்பாக்கம்  ஊராட்சியில் அடங்கிய சக்தி நகர், நியூ காலனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் கடந்த ஐந்து நாளுக்கு மேலாக வெள்ள நீர் வடியாமல் மக்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர். காய்கறிகள், பால் மற்றும் மருந்துப்பொருட்கள் முதலான அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் தவிக்கின்றனர். காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வடகால், செட்டிபுண்ணியம் பாலத்தை தாண்டி மழைநீர்  செல்வதால் வடகால் கிராமம் துண்டிக்கப்பட்டு தீவுபோல் உள்ளது.  இங்குள்ள மக்கள், பால் உள்பட அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்குகூட வர முடியாமல் தவிக்கின்றனர். மறைமலை நகராட்சி பகுதிகளான பொத்தேரி, பேரமரமனூர், சட்டமங்கலம் மற்றும் கிழக்கு, மேற்கு பொத்தேரி, நின்னகாட்டூர், குறிஞ்சி நகரில் கடந்த ஐந்து நாளாக தேங்கிய மழைநீர் இன்றுவரை வடியாமல் உள்ளது.

இந்த கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 1850  ஹெக்டேர் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. 50 வீடுகள் இடிந்துள்ளது. 500க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்துவிட்டது. வேர்க்கடலை, வாழை, மரவள்ளி கிழங்கு பயிர் உள்பட ஆயிரம் ஹெக்டேர் நெற் பயிர்கள் சேதம்  அடைந்துள்ளது. குருவமேடு, செட்டிப்பாளையம் தரைப்பாலத்தில் சுமார் 10 அடிக்கு மேல் தண்ணீர் செல்வதால் கிராமத்துக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு மக்கள் தவிக்கின்றனர்.

சென்னை அருகே அம்பத்தூர் மாதனாங்குப்பம், தாதாங்குப்பம், அன்னை நகர், வனசக்தி நகர், டிவிஎஸ் நகர், தாமரைக்குளம் மேடு, ைஹவேஸ் நகர், சாரதா நகர், எல்லையம்மன் நகர், பாலாஜி நகர், ராஜீவ்காந்தி நகரில் கடந்த 3 நாட்களாகமழைநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதுபோல், ஆவடி வசந்தம் நகர், சங்கர நகர், புது நகர், பெரியார் நகர், சரஸ்வதி நகர் மற்றும் திருமுல்லைவாயல் பகுதிகளான மணிகண்டபுரம், சக்தி நகர், சோழன் நகரிலும் வீடுகளும் மழைநீர் சூழ்ந்துள்ளது. திருநின்றவூர் பகுதிகளான நத்தம்பேடு அண்ணாநகர் உள்பட பல பகுதிகளில் சில நாட்களாக மழைநீர் தேங்கியுள்ளதால் மக்களின் அடிப்படை வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

Related Stories: