மழைநீர் நடுவே வீடுகள்: தவிக்கும் பட்டாபிராம் மக்கள்

ஆவடி: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில நாட்களாக காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது. இதனால் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பட்டாபிராம் பகுதிகளான கிழக்கு கோபாலபுரம், மேற்கு கோபாலபுரம், குறிஞ்சி மாநகர் மற்றும் முல்லை நகர் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்து நிற்கிறது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர். பால் உள்பட அடிப்படை தேவைக்கான பொருட்களை கூட வாங்கமுடியாமல் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். பல பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்துவிட்டதால் துர்நாற்றம் வீசுகிறது. இதில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி மக்களை கடிப்பதால் பல்வேறு நோய்கள் தாக்கும் ஆபத்துள்ளது.

முறையான வடிகால் வசதி இல்லாததால்தான் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது என்று மக்கள் கூறுகின்றனர். ஒவ்வொரு வருடமும் மழைக்காலத்தின்போது இதுகுறித்து பொதுமக்கள் ஆவடி மாநகராட்சிக்கு புகார் செய்கின்றனர். ஆனால் வடிகால்அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். இதனால்தான் சிறு மழை பெய்தால்கூட தண்ணீர் வீடுகளை சூழ்ந்துவிடுகிறது. எனவே, இனிமேலாவது ஆவடி மாநகராட்சி நிர்வாகம் கவனித்து பட்டாபிராம் பகுதியில் வீடுகளை சூழ்ந்துள்ள மழைநீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லாவிட்டால், பொதுமக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபடுவார்கள்’’ என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘பட்டாபிராம் பகுதியில் மழைவெள்ளம் இதுவரை வடியவில்லை. இதனால் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு அவதிப்படுகிறோம். இதுவரை எந்த அதிகாரிகளும் பார்வையிட வரவில்லை’ என்றனர்.

Related Stories: