மெரினாவில் மழையால் சேதமடைந்த கண்ணகி சிலை பீடம் சீரமைப்பு

சென்னை: மெரினாவில் மழையால் சேதமடைந்த கண்ணகி சிலை பீடம் சீரமைக்கப்பட்டது. மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் திருவள்ளுவர், அவ்வையார், காந்தி, பாரதியார், பாரதிதாசன், நேதாஜி, காமராஜர் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்கள், தமிழ் அறிஞர்கள் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை பொதுப்பணித்துறை பராமரித்து வருகிறது. கடந்த 1986ம் ஆண்டு திமுக ஆட்சியில் மெரினா கடற்கரையில் கண்ணகி சிலை அமைக்கப்பட்டது. பின்னர், ஜெயலலிதா ஆட்சியின் போது கடந்த 2002ம் ஆண்டு மே மாதம் இந்த சிலை இரவோடு இரவாக அகற்றப்பட்டது.

தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் அறிஞர்கள் வேண்டுகோளை ஏற்று திமுக ஆட்சியில் மீண்டும் அங்கு கண்ணகி சிலை அமைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் கண்ணகி சிலை பீடத்தின் மார்பிள் கற்கள் உடைந்து கிடந்தது. தகவலறிந்து வந்த அண்ணா சதுக்கம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், நிவர் புயல் காரணமாக கண்ணகி சிலை பீடம் உடைந்தது தெரியவந்தது. இதுபற்றி செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் பொதுப்பணித்துறை கட்டுமான பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராஜா மோகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் செயற்பொறியாளர் லால்பகதூர் தலைமையில் பொறியாளர்கள் நேற்று கண்ணகி சிலை பீடத்துக்கான மார்பிள் கற்களை சீரமைத்தனர். சுமார் 3 மணி நேரத்தில் இப்பணிகள் முடிக்கப்பட்டன என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: